உலகம்

“ஹெர்ட் இம்யூனிட்டி முறையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது கடினம்; தடுப்பூசியே தீர்வு” - WHO விஞ்ஞானி தகவல்!

கொரோனா வைரஸுக்கு எதிராக மனிதர்களிடையே ‛ஹெர்ட் இம்யூனிட்டி’ உருவாக நீண்டகாலமாகும் என்பதால் தடுப்பு மருந்து ஒன்றே தீர்வு என என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

ஹெர்ட் இம்யூனிட்டி (Herd Immunity) என்பது தொற்றுநோய்க்கு எதிராக மக்களை நோய்தடுப்பாற்றல் உள்ளவர்களாக மாற்றுதல். ஒரு குறிப்பிட்ட அளவிலான மக்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டால், இந்த நோய்க்கு எதிராக தடுப்பாற்றல் உருவாகும். இதனால் நோய்ப் பரவல் குறைந்து இறுதியில் தொற்று முற்றிலுமாக நின்றுவிடும்.

ஹெர்ட் இம்யூனிட்டி முறையில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, அரசுகளே நோய் பரவுவதை ஊக்குவிப்பதாக சில தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் லண்டனில் இருந்து அதன் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் காணொளிக் காட்சி வாயிலாக பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், “கொரோனா வைரஸுக்கு எதிராக ‛ஹெர்ட் இம்யூனிட்டி' எனப்படும் மந்தை நோய்த் தடுப்பாற்றலை மனிதர்கள் இயற்கையாகப் பெற நீண்டகாலமாகும். மிகப்பெரிய அளவில் மனிதர்களுக்கு நோய்தடுப்பாற்றல் கிடைத்தால் மட்டுமே ஹெர்ட் இம்யூனிட்டி முறை சாத்தியமாகும்.

உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்பின்படி 50 முதல் 60 சதவீத மக்களுக்கு நோய்தடுப்பாற்றல் கிடைத்தால்தான் ஹெர்ட் இம்யூனிட்டி முறை சாத்தியம்.

கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட சில நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் அங்குள்ள 5 முதல் 10 சதவீத மக்கள் மட்டுமே நோய்த் தடுப்பாற்றலைப் பெற்றுள்ளனர். இயற்கையாக நோய்த் தடுப்பாற்றலைப் பெறுவதற்கு நாடு முழுவதும் தொற்று அலை அலையாகப் பரவ வேண்டும்.

ஆனால், உலக சுகாதார அமைப்பின்படி, தடுப்பூசி மூலம் நோய்த்தடுப்பாற்றலைப் பெறுவதுதான் பாதுகாப்பானது. மக்கள் நோயால் பாதிக்கப்படாமல் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெற முடியும். இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி தயாராகிவிடும் எனக் கணித்துள்ளோம்.

கொரோனா வைரஸ் பாதிப்பின் தீவிரத்தை உணர்ந்து விஞ்ஞானிகள் மிகவேகமாக தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளனர். உலகில் கோடிக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் என்பதால், அனைவருக்கும் கிடைக்க சிறிது காலமாகும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13.36 லட்சத்தை தாண்டியது - ஒரே நாளில் 48,916 பேர் பாதிப்பு.. 757 பேர் பலி!