உலகம்

“ஒவ்வொரு மணி நேரமும் அமெரிக்காவில் 2,000 பேருக்கு கொரோனா பாதிப்பு” - WHO தகவல்!

அமெரிக்காவில் ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 2,000க்கும் அதிகமானவர்களுக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 1.5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸுக்கு பலியாகியுள்ளனர்.

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும் உள்ளன. மூன்றாவது இடத்தில் உள்ளது இந்தியா. நான்காவது இடத்தில் ரஷ்யா உள்ளது.

இந்நிலையில் கொரோனா சில நாடுகளில் தீவிர பரவலை எட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில்,

“கொரோனா வைரஸ் பரவல் சில நாடுகளில் தீவிரமடைந்துள்ளது. உலக அளவிலான மொத்த கொரோனா பரவலில் மூன்றில் இரண்டு பங்கு, 10 நாடுகளில் மட்டுமே உள்ளது.

குறிப்பாக, அமெரிக்காவில் ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 2,000க்கும் அதிகமானவர்களுக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கவில் இதுவரை, 40 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: உச்சம் தொட்ட கொரோனா பரவல் : இன்று மட்டும் 6,472 பேருக்கு தொற்று... 88 பேர் பலி! #Corona