சென்னையில் இன்று கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று காலை ரிப்பன் கட்டடட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களைக் கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், சமூக ஊடகங்களில் வரப்பெற்ற புகார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தபோது, தேனாம்பேட்டை மண்டலம் நுங்கம்பாக்கம் வார்டு 111 இல் ஜெய்சங்கர் பாதை பகுதியில் இருந்து நிதின் என்பவரிடம் வரப்பெற்ற புகார் குறித்து கேட்டறிந்தார். இதன் தொடர்ச்சியாக துணை முதலமைச்சர் உதயநிதி சலின் ஜெய்சங்கர் பாதை பகுதிக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு, தேங்கிய மழை நீரை அகற்றிட உத்தரவிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர், "மழை பாதிப்பு குறித்து தொலைபேசியின் மூலம் வரும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு தொலைபேசி மூலமாக வந்த புகாரை அடுத்து, நேரடியாக அந்த பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டு இருக்கின்றேன். பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளனர்.
மழை பாதிப்பு உள்ள டெல்டா மாவட்டங்களை பார்வையிட அமைச்சர்களை முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளார். மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் தொடர்ந்து பேசி வருகிறார். மழை பாதிப்பு குறித்து எல்லா இடத்திலும் எச்சரிக்கையாக இருக்கிறோம்"என்று தெரிவித்தார்.