உலகம்

“கொரோனா இல்லாத நாடாக மாறிய நியூசிலாந்து : நியூசி. பிரதமர் பெருமிதம்” - இந்திய பிரதமர் பாடம் கற்பாரா?

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் வருகிறது கொரோனா பெருந்தொற்று. கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.

இன்னும் இந்தியா, ரஷ்யா போன்ற பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 71,98,636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 4,08,734 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். இதில் கொரோனா வேகமாக பரவும் நாடுகளில் நியூசிலாந்தும் முன்னிலையில் உள்ளது.

கடந்த மார்ச் 25ம் தேதி நியூசிலாந்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 5 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சில தளர்வுகளுடன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து தற்போதுவரை நியூசிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,504 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆகவும் உள்ளது. கடந்த மூன்று மாதங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு எடுத்த தீவிர நடவடிக்கையால் தொற்று பாதிப்பு குறைந்து 106 வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. அங்கு அனுமதிக்கப்பட்ட கடைசி நோயாளியும் இரண்டு நாட்களுக்கு முன்பு குணமடைந்து வீடுதிரும்பியுள்ளார். இதனால் தற்போது கொரோனா இல்லாத நாடாக நியூசிலாந்து மாறியுள்ளது.

உலகிலேயே இளம் வயது பிரதமராக இருப்பவர் நியூசிலாந்து பெண் பிரதமர் ஜெசிந்தா மார்த்தோ. இவரின் துடிப்பான நடவடிக்கைக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பாதிப்பை பொறுத்து ஜூன் 22ம் தேதியோடு முழுமையாக ஊரடங்கை தளர்த்த நியூசிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.

ஆனால் நாட்டின் எல்லை தொடர்ந்து மூடியிருக்கும் என்றும் பிற நாடுகளுக்குச் செல்ல அனுமதி இல்லை என்றும் அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாட்டுமக்களிடையே உரையாற்றிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா, “நாம் தற்போது அடைந்திருப்பது முழுமையான வெற்றி அல்ல. நாம் ஒரு மைல்கல்லைக் கடந்திருக்கிறோம். நாட்டில் பாதிப்பு இல்லையென்றாலும் மக்கள் சுயபாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். முன்பைவிட இன்னும் கவனமாக இருக்கவேண்டும்” என உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது நாட்டில் பாதிப்பு இல்லை என்பதை தெரிவித்த சுகாதாரத்துறை, இனி தனிமனித இடைவெளி, மாஸ்க் போன்றவை கட்டாயம் அல்ல. ஆனாலும் அவற்றை பின் தொடர்வதை நம் வழக்கமாக கொண்டால் சிறந்தது என்று தெரிவித்துள்ளது.

அரசின் நடவடிக்கை மற்றும் மக்களின் ஒத்துழைப்பால் நியூசிலாந்தில் கொரோனாவை வென்றிருக்கிறார்கள். நியூசிலாந்து அரசிடம் இருந்து இந்தியா பாடம் கற்றால் பாதிப்பில் இருந்து வெளியேறலாம் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: நிறவெறிக்கு ஆதரவாக ட்வீட் போட்ட நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட Reebok நிறுவனம்: குவியும் ஆதரவு