உலகம்

சுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடைக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் - மதிப்பு 300 கோடி ரூபாய்!

கணக்கில் வராத கறுப்பு பணத்தை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சுவிஸ் வங்கியில் வைத்திருப்பது வழக்கமானதாக கருதப்படுகிறது. அப்படி இருக்கையில், அந்த சுவிஸ் வங்கியில் செயல்பாடற்று கிடக்கும் சுமார் 2600 வங்கிக் கணக்குகளின் விவரங்களை கடந்த 2015ம் ஆண்டே வெளியிட்டது சுவிஸ் அரசு.

அவற்றில் 1955 முதல் தற்போது வரையில் சுமார் 300 கோடி ரூபாய் அளவுக்கான (45 மில்லியன் சுவிஸ் பிராங்க்) கணக்குகள் உரிமைக் கோராமல் உள்ளது. இந்தியர்களே இந்த கணக்குகளுக்கு சொந்தக்காரர்கள். அந்தந்த கணக்குகளின் உரிமையாளர்களோ அல்லது அவர்களின் வாரிசுதாரர்களோ உரிய ஆவணத்தை சமர்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் எனவும் சுவிஸ் அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் ஆண்டுதோறும் வெளியிட்ட கணக்குகளையும் சேர்த்து, 2600 ஆக இருந்த செயல்படாத கணக்கு தற்போது 3500 ஆக அதிகரித்துள்ளது. இதில், கொல்கத்தா, மும்பை உட்பட இந்தியர்களின் 10 கணக்குகளில் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர்களும் இதில் அடங்குவர்.

இதில், கடந்த 6 ஆண்டு காலத்தில் ஒரு இந்தியர் கூட பணத்தை திரும்பப் பெறவில்லை என்றும், இந்தியர்களின் கணக்குகளில் நவம்பர் 15ம் தேதியுடன் லீலா தாலுக்தார் மற்றும் பிரமதா.என்.தாலுக்தாரின் கணக்கும், சந்திரலதா ப்ரன்லால் படேல், மோஹன் லான் மற்றும் கிஷோர் லால் ஆகியோரது கணக்குகள் வருகிற டிசம்பர் மாதம் இறுதியிலும் உரிமைக் கோருவதற்கான கால அவகாசம் முடிவடைகிறது என சுவிஸ் அரசு அறிவித்துள்ளது.

மேலும், சில கணக்குகளுக்கான அவகாசம் அடுத்த ஆண்டு இறுதி வரை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் எவரும் தங்களது கணக்குகளுக்கு உரிமை கோரவில்லை என்றால் அந்த பணம் மொத்தமும் சுவிட்சர்லாந்து அரசு சொந்தமானதாக அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.