உலகம்

வளர்த்த முதலாளியையே கடித்துக் கொன்ற நாய்கள் : காணாமல் போனவரை தேடும்போது வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உறவினர்கள் யாருமின்றி 54 வயது முதியவர் ஒருவர் தனியாக வசித்து வந்துள்ளார். அவர் செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் ஆர்வமாக இருந்துள்ளார். அதனால் 18 நாய்களை வாங்கி அவர் வளர்த்துள்ளார்.

இதனிடையே கடந்த சில நாட்களாக அவர் அந்த வீட்டில் இல்லாதது அருகில் உள்ளவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாய்களும் அடிக்கடி சண்டையிட்டு குறைத்துக்கொண்டே இருந்துள்ளன. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் அவரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முதியவர் வசித்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அங்கு மனித எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதனை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த பரிசோதனை முடிவில் அது அந்த முதியவருடையது தான் என தெரிவந்தது.

பின்னர் நடத்திய விசாரணையில், முதியவர் வளர்த்து வந்த 18 நாய்களும் அவரைக் கடித்துக் கொன்றது தெரியவந்துள்ளது. போதிய உணவு கிடைக்காமல் வெறிபிடித்து நாய்கள் அவரைக் கடித்துக் கொன்றிருக்கலாம் எனத் தெரிகிறது. பின்னர் அங்கும் இங்குமாகத் திரிந்த நாய்களை மீட்டு பராமரிப்பு மையங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதியவரின் உறவினர்கள் யாரேனும் உள்ளார்களா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.