உலகம்

மருத்துவரின் கொடூர செயலால் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 400 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி பாதிப்பு

பாகிஸ்தானில் இருக்கும் வசாயோ கிராமத்தில் சுமார் 400 பேருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதில் பெரும்பாலும் குழந்தைகளே பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலருக்கு எச்.ஐ.வி இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதால், கிராம மக்கள் அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இது பற்றி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த கிராமத்தில் மட்டும் 400 பேருக்கு மேல் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகம் பாதிக்கப்பட்டது குழந்தைகள்தான். பாகிஸ்தானின் பல்வேறு இடங்களுக்கு இந்த எய்ட்ஸ் பாதிப்பு பரவும் வாய்ப்புள்ளது' என்று தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட போது தவறான உபகரணங்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட ஊசியை மீண்டும் பயன்படுத்தியதால் தொற்று பரவியது தெரியவந்துள்ளது. பணத்தை சேமிப்பதற்காக, மருத்துவர் ஒரே ஊசியை பல நோயாளிகளுக்கு பயன்படுத்தியதே எச்.ஐ.வி தொற்றுக்கான முக்கிய காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த 2 வாரங்களில் 500க்கும் மேற்பட்டோர் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் அப்பகுதியில் க்ளினிக் வைத்துள்ள குழந்தைகள் மருத்துவரான முசபர் கங்கர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரும் எச்.ஐ.வி நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், சுமார் 5 இடங்களில் தற்போது கிராம மக்கள் அனைவருக்கும் எய்ட்ஸ் பாதிப்பு குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பல பெற்றோர்கள், சோதனை அறைகளுக்கு வெளியே சோகம் படிந்த முகங்களுடன் காத்துக் கிடக்கின்றனர். பலருக்கு, ஏற்கெனவே தங்கள் குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரிந்து செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.

பாகிஸ்தானில் 2017 ஆம் ஆண்டு மட்டும், புதிதாக 20,000 பேர் எச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்டனர். தற்போது ஆசிய அளவில் அதிக எச்.ஐ.வி நோயாளிகளை கொண்டுள்ள இரண்டாவது நாடாக உருவெடுத்துள்ளது பாகிஸ்தான் என்று சொல்கிறது ஐ.நா சபை.

பாகிஸ்தானின் அதிகரிக்கும் மக்கள் தொகையும், மிகவும் குறைவான உட்கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதிகளும் நோயின் தாக்கத்தை மேலும் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது. சில அரசு தரவுகள், பாகிஸ்தானில் சுமார் 6,000,00 போலி மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது.