Viral

தொடரும் சம்பவம்... மருத்துவமனையில் Reels... சஸ்பெண்ட் செய்யப்பட்ட 38 மருத்துவ மாணவர்கள் !

நவீன உலகில் அனைவரும் பயன்படுத்தும் முக்கிய உபகரணங்களில் முக்கியமானவையாக மொபைல் போன்கள் உள்ளது. அதில் முக்கியமான ஆப்கள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. எப்போது இந்த மொபைல் போன்களில் செல்பி என்ற ஒன்று வந்ததோ, அப்போதில் இருந்து உயிரிழப்புகள் குறித்த செய்திகளும் வந்த வண்ணமாக காணப்படுகிறது.

அதோடு டிக் டாக் என்ற ஆப் மூலம் தங்கள் திறமைகளை உலகிற்கு காட்டலாம் என்று அநேகமானோர் பல விஷயங்களை செய்து வந்தனர். டிக் டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டதும், இன்ஸ்டாவில் ரீல்ஸ் என்ற ஒன்று வந்தது. தொடர்ந்து மக்கள் தற்போது அதனை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரீல்ஸ் மூலம் மக்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வரும் நிலையில், பலரும் சமூக பொறுப்பின்மையோடு செயல்பட்டு வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம்தான் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலம் கடாக் பகுதியில் கடாக் மருத்துவ அறிவியல் நிறுவனம் (GIMS) செயல்பட்டு வருகிறது. இங்கு மருத்துவ மாணவர்கள் பலரும் பயின்று வருகின்றனர். இந்த சூழலில் இங்கு பயிலும் மாணவர்கள் சிலர், மருத்துவமனை வளாகத்திற்குள் இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிட்டதால் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இங்கு பயிலும் சில மாணவர்கள் அடிக்கடி ரீல்ஸ் வெளியிட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அது வெளியில் ரீல்ஸ் செய்து வெளியிட்டு வந்த நிலையில், தற்போது மருத்துவமனை வளாகத்திற்குள் இதனை செய்துள்ளனர். அங்கிருக்கும் நோயாளிகள் பலரும் தங்கள் நோயால் அவதிப்பட்டு வரும் நிலையில், மருத்துவ மாணவர்கள் பொறுப்பற்ற முறையில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மருத்துவமனையில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் சுமார் 38 பேர் இந்தி மற்றும் கர்நாடக திரைப்படப் பாடல்களுக்கு ரீல்ஸ் எடுத்து தங்கள் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்த நிலையில், தொடர்ந்து இது வைரலானது. இந்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து அம்மருத்துவமனை இயக்குநர் கவனத்துக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்கள் மீது விசாரணை அமைக்கப்பட்டது. அப்போது அந்த மாணவர்கள் முறையான சரியான பதிலை தெரிவிக்கவில்லை என்பதால் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததோடு, அந்த 38 மாணவர்களையும் 10 நாட்கள் இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற நிகழ்வுகளை மருத்துவமனை வளாகத்திற்குள் அனுமதிக்க முடியாது என்றும், எதிர்காலத்தில் இது போன்று மருத்துவமனையில் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இந்த சம்பவம் தற்போது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக இதே கர்நாடகத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் மருத்துவர் ஒருவர் Operation வார்டில் தனது Pre Wedding Photoshoot எடுத்தது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Chocolate Day : ஆசையாய் Dairy Milk வாங்கிய இளைஞர்.. பிரித்து பார்த்தபோது உயிருடன் நெழிந்த புழு ! | VIDEO