Viral

“அந்த மனசுதான் சார்..” - பச்சிளம் குழந்தைக்கு அரியவகை நோய்.. ரூ.11 கோடி நன்கொடை அளித்த மர்ம மகான்.. !

கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர் சாரங் மேனன் - ஆதித்தி தம்பதி. இவர்கள் தற்போது மும்பையில் வசித்து வரும் நிலையில், இவர்களுக்கு 15 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நலக்கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஸ்பைனல் மஸ்குலர் ஆன்ட்ரோபி’ என்ற அரிய வகை மரபணு கோளாறு இருப்பது தெரியவந்தது. இந்த அரியவகை நோயானது உடலில் உள்ள தசைகளை பலவீனமடையச் செய்து இயங்க முடியாமல் செய்யும். இதற்கு சிகிச்சை அளிக்க பல லட்சம் செலவாகும்.

அதோடு குழந்தைக்கு விரைந்து சிகிச்சை அளிக்காவிட்டால், குழந்தை படுத்த படுக்கை ஆகிவிடும். இந்த சிகிச்சைக்கு மொத்தம் 17 கோடி செலவாகும் என்று மருத்துவர்கள் கூறினர். ஆனால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர்களுக்கு அந்த அளவு வசதி இல்லாததால், இதற்கு ஆன்லைன் மூலம் நன்கொடை உதவி கேட்டுள்ளனர்.

இதற்காக ‘மிலாப்’ என்ற கிரவுட் ஃபண்டிங் தளத்தில் வேண்டுகோளும் விடுத்தனர். இவர்களது இந்த கோரிக்கை பலரையும் சென்றடைந்துள்ளது. இதற்காக ஒரு மலையாள நடிகை கூட தனது சமூக வலைதளம் பக்க வாயிலாக ‘17 லட்சம் பேர் தலா ரூ.100 நன்கொடை வழங்கினால் ரூ.17 கோடி கிடைத்து விடும். இது மிகவும் சாத்தியமானது’’ என்று பதிவிட்டு நன்கொடை செய்ய கோரிக்கை வைத்திருந்தார். இப்படி பலரும் இதனை ஷேர் செய்து அவர்களுக்கு உதவி பெற்று தந்துள்ளனர்.

மிலாப் கிரவுட் ஃபண்டிங் தளத்தின் மூலமே சுமார் 56 ஆயிரம் பேர் நன்கொடை வழங்கியுள்ளனர். இதன்மூலம் அவர்களுக்கு சுமார் 15 கோடிக்கு மேல் நிதியுதவி கிடைத்துள்ளது. இதில் ஒருவர் மட்டும் அமெரிக்க டாலர் மதிப்பில் $1.4 மில்லியன் (ரூ. 11.5 கோடி) நிதி அனுப்பியுள்ளார். பெயர் வெளியிடாத அந்த நபர் அளித்த இவ்வளவு பெரிய நன்கொடை தொகை அந்த குழந்தையின் சிகிச்சைக்கு பிரதானமாக உதவும்.

இது குறித்து குழந்தையின் பெற்றோர் கூறுகையில், “இந்த நன்கொடை குறித்து எங்களுக்கு நேற்றுதான் (திங்கட்கிழமை) தகவல் கிடைத்தது. ஆனால், நன்கொடை அளித்தவர் இந்தியரா, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரா அல்லது அமெரிக்கரா என்று எங்களுக்கு எந்தத் தகவலும் தெரியவில்லை.

அது ஒரு ஜென்டில்மேன் அல்லது ஒரு பெண்ணாக இருக்கலாம். இந்த பெரிய நன்கொடையை யார் செய்தார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் இது இந்த நேரத்திற்கு எங்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக வந்துள்ளது. யாராக இருந்தாலும் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி. எங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை, சிகிச்சை செலவுக்கு தங்களுக்கு இன்னும் ரூ.80 லட்சம் மட்டுமே தேவை” என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

15 மாத கைக்குழந்தைக்கு ஏற்பட்ட அரியவகை நோய்க்கு சிகிச்சை அளிக்க மர்ம நபர் ஒருவர் 11.5 கோடி நன்கொடை அளித்துள்ள சம்பவம் அனைவர் மத்தியிலும் மிகப்பெரிய பாராட்டை பெற்று வருகிறது. அதோடு இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அமெரிக்க தேர்தல் : டிரம்புக்கு போட்டியாக களமிறங்கும் இந்திய வம்சாவளி வாலிபர்.. யார் இந்த விவேக் ராமசாமி ?