Viral

விடுமுறையில் உள்ள ஊழியரிடம் டவுட் கேட்டால் ரூ.1 லட்சம் அபராதம்: அதிரடி முடிவெடுத்த Dream 11 நிறுவனம்!

உலகம் முழுவதும் வேலை நேரத்தை விட அதிகமாகவே பலரும் வேலை செய்து வருகின்றனர். கூடுதல் நேரத்திற்குப் பல நிறுவனங்கள் அதற்கான ஊதியத்தைக் கூட கொடுப்பதில்லை. மேலும் விடுமுறை கூட அளிக்காமல் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வேலை வாங்கி வருகிறது. இதனால் பலரும் தங்கள் குடும்பத்தினருடன் நேரங்களைக் கழிக்க முடியாமல் போகிறது.

அதேபோல் கொரோனா வந்த பிறகு விடுமுறை கொடுத்தாலும் வீட்டிலிருந்து சில மணி நேரம் வேலை செய்யும் படி பல ஐ.டி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வலியுறுத்துகிறது. இதனால் விடுமுறையில் இருந்தாலும் வேலை செய்ய வேண்டிய நிலையே தற்போது இருந்து வருகிறது.

இந்நிலையில், விடுமுறை நாட்களில் உள்ள ஊழியர்களுக்கு ஏதாவது வேலை கொடுத்தாலோ அல்லது வேலை தொடர்பாக அவர்களிடம் கேட்டாலோ அந்த நபருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என Dream 11 அறிவித்துள்ளது.

இதற்கு என்று தனி திட்டத்தையும் Dream 11 வெளியிட்டுள்ளது. அதில், "விடுமுறை நாட்களில் வேலை தொடர்பான அழைப்புகள், குறுஞ்செய்திகள் அனுப்புவதால் ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் செலவிடவோ அல்லது ஓய்வெடுக்கவோ முடியவில்லை.

இதைத் தடுக்கவே UNPLUG என்ற கொள்கையைக் கொண்டு வந்துள்ளோம். எங்களது ஊழியர்கள் தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தங்கள் தனிப்பட்ட நேரத்தை அனுபவிக்க விரும்புகிறார்கள்.

எனவே விடுமுறை நாட்களில் வேலை தொடர்பான அழைப்போ அல்லது குறுஞ்செய்தி அனுப்பினலோ அந்த நபருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இந்த விதி சாதாரண ஊழியர்கள் முதல் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் என அனைவருக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது.

Dream 11 நிறுவனத்தின் இந்த முடிவு ஊழியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. அதேபோல் தங்கள் நிறுவனத்திலும் இப்படியான ஒரு முடிவு எடுக்க வேண்டும் என இணைய வாசிகள் பலரும் இணையத்தில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Also Read: 3 உலகக் கோப்பை.. 1281 கோல்கள்: 'கருப்பு முத்து' என்று புகழப்பட்ட பீலே சாதனைகளை திரும்பி பார்ப்போம்!