Viral

சிக்கன் டிக்கா மசாலா உணவை கண்டுபிடித்த பிரபல சமையல் கலைஞர் மரணம்.. யார் இந்த அலி அகமது அஸ்லாம்?

உலகம் முழுவதும் அதிகமாக விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக சிக்கன் கறி இருக்கிறது. இதற்கு காரணம் மற்ற கறிகளை விட சிக்கன்தான் பல வகையில் சமைத்து கிடைக்கிறது. சிக்கன் 65, சிக்கன் மசாலா, சிக்கன் டிக்கா, தந்தூரி சிக்கன் என சிக்கன் வகையின் பட்டியல் நீண்டது. இதனால்தான் சிக்கன் கறிக்கு உலகம் முழுவதும் அசைவ விரும்பிகள் இருக்கிறார்கள்.

அந்த வகையில் அனைவரும் விரும்பி சாப்பிட்டு வந்த சிக்கன் டிக்கா மசாலா உணவைக் கண்டுபிடித்த பிரபல சமையல் கலைஞர் அலி அகமது அஸ்லாம் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி அசைவை உணவு பிரியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் சிக்கன் டிக்கா மசாலா விதவிதமாக சமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் முதன் முதலில் இதை கண்டுபிடித்தவர் அலி அகமது அஸ்லாம் தான். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இவர் 1964ம் ஆண்டு பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகருக்குக் குடிபெயர்ந்துள்ளார்.

பிறகு அங்கு ஷிசிஸ் மஹால் என்ற உணவகத்தைத் தொடங்கி நடத்தி வந்துள்ளார். இந்த உணவகத்தில் தான் முதன் முதலில் சிக்கன் டிக்கா மசாலாவை அலி அகமது அஸ்லாம் கண்டுபிடித்தார்.

முதலில் இதை சாதாரண வேகவைத்த கறியைப் போன்றே தயாரித்துக் கொடுத்து வந்துள்ளார். அப்படி ஒருநாள் அவரது உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர் சிக்கன் டிக்கா உணவை சாப்பிட்டு பார்த்துள்ளார்.

அப்போது அந்த வாடிக்கையாளர் இதனுடன் நான் கொஞ்சம் சாஸ் எடுத்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். இவரின் இந்த யோசனைதான் சிக்கன் டிக்காவை மேலும் சுவையாக்க வைத்துள்ளது.

அதையடுத்துதான் சிக்கன் டிக்காவில் தக்காளி சாஸ், கிரிம் மற்றும் சில மசாலாக்கலைச் சேர்த்துச் சிக்கன் டிக்கா மசாலாவை கண்டுபிடித்துள்ளார்.

இதன்பின்னர் பிரிட்டன் மக்களின் விருப்பமான ஒரு உணவாக இந்த சிக்கன் டிக்கா மசாலா மாறிவிட்டது. இந்த சிக்கன் டிக்கா மசாலா சாப்பிடுவதற்காகவே உணவு பிரியர்கள் பலரும் இவரின் உணவகத்திற்கு வந்து சென்றுள்ளனர்.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் பிரிட்டன் மக்களுக்கு சுவையான சிக்கன் டிக்கா மசாலாவை கொடுத்துவந்த அலி அகமது அஸ்லாம் தனது 77 வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஷிஷ் மஹால் உணவகம் 2 நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அலி அகமது அஸ்லாம் மறைவுக்குப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Also Read: 350 ரூபாய் மெஷினுக்கு 10,000 பில் எழுதிய அண்ணாமலை - AMAZON மூலம் வெளிவந்த உண்மை !