Viral

உலக அழகி போட்டியில் மோசடி செய்த பிரியங்கா சோப்ரா.. 22 ஆண்டுகளுக்குப் பிறகு புகார் சொன்ன சக போட்டியாளர்!

தமிழில், விஜய் ஜோடியாக அறிமுகமாகி இந்தியில் முன்னணி நாயகியாக உயர்ந்தவர் பிரியங்கா சோப்ரா. இப்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் தொடர்களிலும் நடித்துவருகிறார். மேலும் பிரியங்கா சோப்ரா, கடந்த 2018 -ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரான நிக் ஜோனஸை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்குச் சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் 2000ம் ஆண்டு நடைபெற்ற உலக அழகி போட்டியில் நடந்த மோசடியால்தான் இந்தியாவைச் சேர்ந்த பிரியங்கா சோப்ரா வெற்றி பெற்றார் என 22 ஆண்டுகள் கழித்து அவருடன் சக போட்டியாளராக இருந்த லீலானி மெக்னோனி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

அண்மையில் அமெரிக்காவில், முன்னாள் உலக அழகிகளுக்கான போட்டி நடைபெற்றது. இதில் ஆர் போனி கேப்ரியல் பட்டம் வென்றார். இந்நிலையல் இந்த போட்டியில் மோசடி நடந்துள்ளது என 'மிஸ் பார்படாஸ்' அழகி பட்டம் வென்ற லீனானி மெக்கோனி குற்றச்சாட்டு வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "முன்னாள் உலக அழகிபோட்டியில் ஸ்பான்சர்கள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்களின் ஆதரவு காரணமாகவே ஆர்போனி கேப்ரியல் வெற்றி பெற்றார். மேலும் 2000ம் ஆண்டு நடைபெற்ற உலக அழகி போட்டியிலும் மோசடி நடந்துள்ளது.

இதனால்தான் இந்தியாவைச் சேர்ந்த பிரியங்கா சோப்ரா வெற்றி பெற்றார். போட்டியை நடத்தும் ஸ்பான்சர் நிறுவனமாக இந்தியாவைச் சோர்ந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனம் இருந்ததால் தான் பிரியங்கா சோப்ராவால் வெற்றி பெற முடிந்தது.

மேலும் நீச்சல் உடை அணியும் பிரிவில் பிரியங்கா சோப்ராவுக்கு மட்டும் சேலை அணிய அனுமதிக்கப்பட்டது. மேலும் போட்டி நடத்தும் அமைப்பாளர்கள் பிரியங்கா சோப்ராவை விரும்பியதால் அவரது உடைகள் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டது. அவருக்கு அவரது அறையிலேயே உணவு கிடைத்தது. மற்ற போட்டியாளர்கள் கடற்கரையில் குவிந்திருந்த படங்கள் செய்தித்தாள்களில் வெளிவந்ததது. அவர்தான் வெற்றி பெறுவார் என்பது வெளிப்படையாகவே அனைவருக்கும் தெரிந்திருந்தது" என பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இவரின் இந்த குற்றச்சாட்டு வீடியோ வைரலானதை அடுத்து ஏன் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது புகார் கூறவேண்டும் என லீலானி மெக்னோனிக்கு பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல் பிரியங்கா சோப்ராவுக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: 'Fake Fielding' செய்தாரா விராட் கோலி ? வங்கதேசத்தை ஏமாற்றி வென்றதா இந்திய அணி ? ICC விதி சொல்வது என்ன ?