Viral

“வலதுசாரி கும்பலுக்கு பதிலடி கொடுத்தது தவறா? - Alt News நிர்வாகி முகமது ஜுபைர் கைது” : நடந்தது என்ன?

இந்தியாவில் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றது முதல் இந்துத்வா கும்பல்களின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. குறிப்பாக பா.ஜ.க அரசையும், இந்துத்வா அரசியலையும் விமர்சிப்பவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், ஒன்றிய அரசின் அமைப்புகளைக் கொண்டு அடுக்குமுறையை கையாளுவதையும் தொடர்ந்து வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அதிலும் இந்தியாவில் ஒன்றிய பா.ஜ.க அரசின் திட்டங்களை விமர்சித்து செய்தி வெளியிடும் பத்திரிக்கை மற்றும் ஊடங்கள் மீது அமலக்கத்துறை உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் மிரட்டல் விடுக்கும் போக்கை செய்து வருகின்றனர்.

காஷ்மீர் மற்றும் வட இந்தியாவில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள் பலர் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறிய அதேவேளையில், போலி குற்றச்சாட்டுகளுக்காக பல செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தவரிசையில் பிரபல போலி செய்திகளை கண்டறிந்து செய்தி வெளியிடும் ஆல்ட் நீயூஸ் இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டுள்ளார். வலதுசாரிகள் மற்றும் இந்துத்வா கும்பல்கள் பரப்பிவிடும் போலி செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அம்பலப்படுத்தி வருகிறது ஆல்ட் நீயூஸ்.

அதன் இணை நிறுவனம் முகமது ஜுபைர், இந்து சாமியார்கள் மாநாட்டு ஒன்றில் முஸ்லீம்களை படுகொலை செய்யவேண்டும் என விமர்சித்ததை கடுமையாக கண்டித்துள்ளார். இந்நிலையில் முகமது ஜுபைர் கண்டனங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவர் மீது உ.பி போலிஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இதனிடையே 2020ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றிற்காக டெல்லி போலிஸார் முகமது ஜுபைர் நேற்று கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் முகமது ஜுபைர் முன் ஜாமீன் பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஆல்ட் நியூஸின் மற்றொரு நிறுவனர் பிரதீக் சின்ஹா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "2020இல் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்குக்கு ஆஜராகும்படி டெல்லி தனிப்பிரிவி போலிஸார் அழைத்தனர். அந்த வழக்கில் தாம் கைது செய்யப்படாமல் இருக்க நீதிமன்றத்தில் இருந்து உத்தரவைப் பெற்றிருந்தார் முகமது ஜுபைர்.

ஆனால், விசாரணைக்கு ஆஜரான முகமது ஜுபைர் மாலை 6.45 மணியளவில் வேறொரு வழக்கில் போலிஸார் கைது செய்துள்ளனர். அதுமட்டுமல்லாது, முதல் தகவல் அறிக்கை நகலைக் கூட வழங்காமல் போலிஸார் கொண்டு சென்றனர்.

பல முறை கேட்டும் போலிஸார் முதல் தகவல் அறிக்கையைக் காண்பிக்கவில்லை. அவரை கொண்டு சென்ற வேனில் இருந்தவர்கள் தங்களுடைய பெயர் பேட்ஜை சீருடையில் அணிந்திருக்கவில்லை” என்று கூறியுள்ளார். முன் ஜாமீன் பெற்ற வழக்கில் எப்படி முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டார் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்தநிலையில், இதுதொடர்பாக டெல்லி போலிஸ் ட்விட்டரில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

அதில், 2018ல் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக ட்விட்டரில் கருத்துத் தெரிவித்ததன் அடிப்படையில் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது. மேலும் நீதிமன்றத்தில் முகமது ஜுபைர் ஆஜர்படுத்திய காவல்துறை அவரை போலிஸ் காவலில் விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனிடையே முகமது ஜுபைர் கைதுக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: 9ம் வகுப்பு மாணவர் மாயமான வழக்கில் திடீர் திருப்பம்.. சகோதரன் முறையைச் சேர்ந்த இளைஞர் போக்சோவில் கைது!