Viral

ஒரு பக்கம் யானை.. மறுபக்கம் கரடி.. வாகனங்களை வழிமறித்து சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்ற கரடி !

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இந்த வனப்பகுதியில் யானை, புலி, மான், சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் மற்றும் அரிய வகை பறவை இனங்களின் வசிப்பிடமாக உள்ளது.

முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வனப்பகுதி முற்றிலும் பசுமைக்கு திரும்பியுள்ளதால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக மாலை நேரங்களில் யானை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் சாலையோரம் உலா வருகின்றன. இதனை அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கண்டு ரசித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

இந்நிலையில், கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கக்கநல்லா பகுதியில் சாலையோரம் உலா வந்த கரடி அவ்வழியாக சென்ற லாரியை வழிமறித்து நீண்டதூரம் சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்றது.

இதனால் லாரி ஓட்டுனர் கரடிக்கு இடையூறு ஏற்படுத்தாமல் கரடியின் பின் நீண்ட தூரம் லாரியை மெதுவாக இயக்கி சென்றார். பின்னர் கரடி சாலையோரம் சென்றதையடுத்து லாரியை கவனத்துடன் சற்று வேகமாக இயக்கி சென்றார். இதனை லாரியில் சென்ற மற்றொரு நபர் தனது செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ள காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டம் முதுமலை வனவிலங்கு புலிகள் காப்பகத்தில் சபாரி சென்ற வாகனத்தை கூட்டத்தில் இருந்த யானை ஒன்று துரத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து தற்போது, லாரியை வழிமறித்து சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்ற கரடியின் வீடியோ வைரலாகி வருகிறது.

Also Read: ‘இது எங்க ஏரியா’.. நூலிழையில் தப்பிய பயணிகள் - தலையை ஆட்டியபடி எச்சரிக்கை விடுத்த காட்டு யானை ! (Video)