Viral

கொரோனா வைரஸ் எதனால் பரவுகிறது? தடுக்கும் வழிமுறைகள் என்ன? - மருத்துவர்கள் அறிவுரை

கொரோனா வைரஸ் எனும் கோவிட்-19 ஆட்கொள்ளி வைரஸாக உலகம் முழுவதும் மிகப்பெரிய பதற்றத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் நோய் தற்போது உலகின் 60 நாடுகளில் பரவியுள்ளது.

தற்போது இந்தியாவிலும் இந்த வைரஸ் தலையை காட்டியுள்ளது. ஏற்கெனவே கேரளாவைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு துரிதமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு குணமடைந்தனர்.

தற்போது மேலும் இருபது நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் மக்கள் மிகுந்த அச்ச உணர்வுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கிடையே கொரோனாவை குணப்படுத்தவும், வராமல் தடுக்கவும் மூலிகைகள், உணவு வகைகளை சாப்பிட்டால் போதும் எனும் கட்டுக்கதைகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

கொரோனா நோய்க்கு மருந்து ஏதும் கண்டுபிடிக்காமல் இருக்கும் நிலையில் இது போன்ற தகவல்கள் பரப்பப்படுவது குழப்பங்களை ஏற்படுத்த ஏதுவாக இருக்கிறது. மேலும், சுற்றுப்புறத்தையும், உடலையும் சுத்தமாக வைத்துக்கொள்வதே கொரோனா வராமல் தடுப்பதற்கான முதல் மருந்தாக இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கொரோனாவில் இருந்து நம்மை தடுத்துக் கொள்வது எப்படி என்பதை தனியார் மருத்துவமனை மருத்துவர் பி.எஸ்.நம்பி விவரித்துள்ளார். அதில், “கொரோனா குறித்த அச்சத்தில் இருந்து மக்கள் நீங்க வேண்டும்.

ஏற்கெனவே நோய் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து வைரஸ் பரவாமல் இருக்கும் வரை எந்த பிரச்னையும் இல்லை. ஆகையல் வைரஸ் தொற்று உள்ளவர்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட்டு உகந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

இந்த கொரோனா வைரஸ் நோய் பரவுவதற்கு அடிப்படை காரணியாக உடலின் நுரையீரல், தொண்டை மற்றும் மூக்கு ஆகிய பாகங்களே உள்ளன. இருமல், தும்மல் வரும் போது சுத்தமான கைக்குட்டைகளை வைத்து முகத்தை மூடிக்கொள்வது கட்டாயம் அவசியமானது.

வைரஸ் தொற்று உள்ளவர்களிடம் இருந்து கைக்குலுக்கவதன் மூலம் மற்றொருவருக்கு பரவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. 3 அடி தொலைவில் உள்ள நபரிடம் இருந்து எவ்வித பிரச்னையும் வராது. ஆகையால் கைக்குலுக்கல்களை தவிர்த்து பாரம்பரிய வழக்கத்தின்படி வணக்கம் என இரு கைக்கூப்பி வரவேற்பதே சிறந்தது.

காய்ச்சலுக்கான அறிகுறி வந்தது உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். அத்தியாவசிய தேவை இல்லாதபோது அடிக்கடி வெளியூருக்கோ, வெளிநாடுகளுக்கோ பயணிப்பதை தவிர்க்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.