Viral

‘ஸ்விகி GO’ சேவையால் ரூ.95,000 பறிப்பு: கூகுளில் இருந்த போலி வாடிக்கையாளர் சேவை எண்ணை நம்பி ஏமாந்த பெண்!

உணவு டெலிவரியின் முன்னிலையில் உள்ள ஸ்விகி நிறுவனம், தற்போது உரியவர்களிடம் பொருட்களை கொண்டு சேர்க்கும் ஸ்விகி GO என்ற சேவையையும் தொடங்கியுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக ஸ்விகி GO சேவை பெங்களூருவில் கடந்த 4-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், ஸ்விகி GO சேவையில் சிக்கி இளம்பெண் ஒருவர் ரூ.95 ஆயிரத்தை பறிகொடுத்துள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த அபர்ணா தாக்கர் (47) என்ற பெண், தனது மொபைல் ஃபோனை OLX மூலம் விற்க முற்பட்டுள்ளார். பிலால் என்பவர் அந்த ஃபோனை வாங்குவதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பிலாலிடம் செல்பேசியை கொண்டு சேர்க்க ஸ்விகி GO சேவையை நாடியுள்ளார். அதன்படி, ஸ்விகி GO மூலம் மொபைல் ஃபோனை கொடுத்து அனுப்பியுள்ளார் அபர்ணா. ஆனால் பிலால் குறிப்பிட்ட முகவரி தவறாக இருந்ததால் அந்த செல்போன், ஸ்விகி GO அலுவலகத்திலேயே ஒப்படைக்கப்பட்டது.

இதன் பிறகு, ஸ்விகி வாடிக்கையாளர் சேவை எண்ணை கூகுள் மூலம் பெற்ற அபர்ணா, அதனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, மறுமுனையில் பேசிய நபர், “உங்கள் தொலைப்பேசிக்கு லிங்க் ஒன்று வரும். அதில் சென்று மீண்டும் ஒரு பொருளை ஆர்டர் செய்தால் உங்களது செல்போன் நீங்கள் கொடுக்கும் முகவரியில் கொண்டு சேர்க்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

கஸ்டமர்கேரின் ஆலோசனைப்படி, லிங்க்கில் சென்றபோது, அதில் வங்கிக்கணக்கு, UPI உள்ளிட்ட விவரங்களை கேட்டதும் அனைத்தையும் அபர்ணாவும் அளித்துள்ளார். அதன் பிறகு அபர்ணாவின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.95 ஆயிரம் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அபர்ணா, போலிஸில் புகார் அளித்துள்ளார்.

போலிஸாரின் விசாரணையின் போது ஸ்விகி நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “அபர்ணா தொடர்புக்கொண்டு பேசியது ஸ்விகி வாடிக்கையாளர் எண்ணே கிடையாது. கூகுளில் இருந்து வேறு ஏதேவொரு எண்ணை தொடர்புக்கொண்டு அவரது விவரங்களை கொடுத்துள்ளார். அதனாலேயே ஏமாற்றப்பட்டுள்ளார்”.

“ஸ்விகி நிறுவனம் எப்போதும், வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கு விவரங்களை கேட்காது. மேலும், செல்போனை டெலிவரி செய்ய அவர் கொடுத்த முகவரியும் தவறாக உள்ளது. அதனால் செல்போன் மீண்டும் எங்கள் அலுவலகத்தில் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது என்றும், அதற்காக அபர்ணாவை தொடர்புகொள்ள முயற்சித்தோம்” என்றும் ஸ்விகி செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, “டெலிவரிக்காக கொடுத்த நம்பருக்கு பதில் அவர் தற்போது வேறு நம்பரை பயன்படுத்துவதால் அவரை எங்கள் வாடிக்கையாளர் சேவை மூலம் தொடர்புகொள்ள முடியவில்லை” எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

இதனையடுத்து, அபர்ணாவின் பணம் திருடப்பட்டிருப்பது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், போலி சேவைதாரர்கள் நாட்டில் ஆங்காங்கே சுற்றித்திரிவதால் மக்கள் முன்னெச்சரிக்கையாகவும், விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் போலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.