Viral

கூகுளில் சிஇஓ பணியிடம் காலி? - சுந்தர் பிச்சையை மாற்ற முடிவா? : உண்மை என்ன?

கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை பொறுப்பு வகிக்கும் சிஇஓ பணியிடம் காலியாக உள்ளது என லிங்க்டுஇன் (linkedin) வலைதளத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பையடுத்து, சுந்தர் பிச்சையை சிஇஓ பொறுப்பில் இருந்து கூகுள் மாற்ற நினைப்பதாக தகவல் பரவியது. ஆனால், அந்த அறிவிப்பு கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டதல்ல; போலியானது எனத் தெரியவந்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான லிங்க்டு-இன் வலைதளத்தில் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகள் அதிகமாக வெளியாகும். உலகின் பெரும் நிறுவனங்கள் முதல் சிறிய வர்த்தக நிறுவனங்கள் வரை பலரும் லிங்க்டு-இன் வலைதளத்தை வேலைவாய்ப்புக்காக பயன்படுத்தி வருகின்றன.

லிங்க்டு-இன் தளத்தில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ பணியிடம் காலியாக உள்ளது என்று பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பலரும் தங்களது விவரங்களை அதில் பதிவு செய்துள்ளனர். அதிகமான ஊதியமும், கௌரவமும் கொண்ட பணி என்பதால் போட்டிபோட்டுக்கொண்டு பலரும் தங்கள் சுயவிவரங்களைப் பதிவேற்றினர்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நெதர்லாந்தைச் சேர்ந்த மிட்செல் ரிஜெண்டர்ஸ் என்பவர், போலியாக இந்த வேலைவாய்ப்புத் தகவலை பதிவிட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, லிங்க்டு-இன் நிறுவனம் அந்தப் பதிவை நீக்கியதைத் தொடர்ந்து கூகுள் நிறுவனம் சுந்தர் பிச்சையை மாற்றுவது தொடர்பான சர்ச்சை தீர்ந்துள்ளது.

இதுதொடர்பாக லிங்க்டு-இன் நிறுவனம் கூறுகையில், “இதுபோன்ற போலியான அறிவிப்பு எங்கள் கவனத்திற்கு வந்ததும் அதை நீக்கிவிட்டோம். மோசடியான பதிவுகள் எங்கள் நிறுவனத்தின் சேவை விதிமுறைகளை மீறுவதாகும்” எனத் தெரிவித்துள்ளனர்.