Viral

நாடு முழுவதும் அதிகரிக்கும் ஏ.டி.எம் கொள்ளை சம்பவங்கள் : பணத்தை பறிகொடுத்ததில் தமிழகம் இரண்டாம் இடம்

நாடு முழுவது அதிகமானோர் தங்களின் பணபரிவர்த்தனைகள் முழுவதும் ஏ.டி.எம் மற்றும் ஆன்லைன் மூலம் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். தொழிற்நுட்பம் எளிதாகி இருக்கும் அதே நேரம், ஆன்லைன் மற்றும் ஏ.டி.எம் பரிவர்த்தனைகளில் பல்வேறு மோசடிகள் நாள்தோறும் அதிக அளவில் நடந்து வருகின்றன.

சென்னையில் ஏ.டி.எம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி மற்றும் கேமரா பொருத்தி ஏ.டி.எம் கார்டு தகவல்களை திருட முயன்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி அதற்கு முன்பு ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து ரூ.40 ஆயிரத்தை மோசடிக் கும்பலிடம் மாணவி ஒருவர் பறிகொடுத்துள்ளார்.

இதுபோன்ற ஏராளமான சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். மக்கள் மத்தியில் காவல்துறையும், வங்கிகளும் விழிப்புணர்வு அளித்து வந்தாலும், அந்தக் குற்றத்தை தடுக்க அவர்களால் போதிய நடவடிக்கை எதுவும் எடுக்க முடியவில்லை என்பதே உண்மை.

இந்நிலையில் இந்த சம்பவங்கள் குறித்து ரிசர்வ் வங்கி அளித்திருக்கும் தகவல் மேலும் அதிர்ச்சி அளித்துள்ளது. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா சமீபத்தில் ஏ.டி.எம் கொள்ளை சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “ஏ.டி.எம் தொடர்பான மோசடி சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. அதில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. இதில், கடந்த 2018 - 2019ம் ஆண்டு மட்டும் மகாராஷ்டிராவில் 233 ஏ.டி.எம் தொடர்பான மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளது.

அதனையடுத்து டெல்லியில் 173 வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்த ஒவ்வொரு சம்பவத்தின் போதும் ரூ.1 லட்சம் அல்லது அதற்கு மேலும் திருடப்பட்டுள்ளதாக வங்கிகள், ரிசர்வ் வங்கியிடம் முறையிட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த மோசடி வழக்குகளால் மகாராஷ்டிரா சுமார் ரூ.4.81 கோடி பணத்தை இழந்து முதல் இடத்திலும், அதற்கு அடுத்து ரூ. 3.63 கோடி பணத்தை இழந்து தமிழகம் இரண்டாம் இடத்திலும், தலைநகர் டெல்லி ரூ. 2.9 கோடி பணத்தை இழந்து மூன்றாம் இடத்திலும் உள்ளது.

அதே ஆண்டில் அசாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில் இதுதொடர்பாக நடைபெற்றக் கொள்ளை நடந்ததாக வழக்குகள் பதிவாகவில்லை. மேலும் நாடு முழுவதும், ஏ.டி.எம் தொடர்பாக மோசடி வழக்குகள் 911 ஆக இருந்து 980 வழக்குகளாக அதிகரித்துள்ளது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், “இந்த ஏ.டி.எம் கொள்கை தொடர்பான அறிக்கையில், 1 லட்சத்திற்கும் குறைவான திருட்டுக் குறித்து கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது. பெரும்பாலும் டெபிட் கார்டுகள் மற்றும் ஏ.டி.எம் மூலமாகதான் திருடப்படுகிறது.

சமீபத்தில் அதிக ஏ.டி.எம் மையங்களில் உள்ள இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவி மற்றும் கேமரா பொருத்தி, பயணர்களின் தகவல்களை திருடி அதன் மூலம் கொள்ளையடிக்கிறனர். மேலும் சைபர் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் மையம் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இதுபோல குற்றங்களில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகளையும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும் பயனாளர்கள் அதனை கடைபிடித்து தங்கள் பணத்தை பாதுகாக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.