Viral
செலவுக்கு பணமில்லாததால் செயின் பறிக்க திட்டமிட்ட இளைஞர்கள்: தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், மீட்ட காவல்துறை
சமீப காலங்களாக பெண்களையும், முதியவர்களையும் குறிவைத்து செயின் பறிப்பு சம்பவங்கள் தமிழகத்தில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு விபத்துகளும், உயிர் இழப்புகளும் நடந்திருப்பதால், குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனைக் கண்காணிக்கும் விதமாக சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் சி.சி.டி.வி கேமிராக்களை பொருத்தச் சொல்லியும், இரவு நேர ரோந்து பணிகளை அதிகரித்து உத்தரவிட்டது காவல்துறை. இருப்பினும் ஆங்காங்கே செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றே வருகிறது.
இந்த நிலையில் சென்னை மீஞ்சூரில் உள்ள ரமணா நகரில் வசித்து வரும் தெய்வானை என்ற பெண்ணிடம் இருந்து செயினை பறித்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தெய்வானையின் கழுத்தில் உள்ள செயினை பார்த்ததும் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இரு இளைஞர்கள் அப்பெண்ணின் பக்கம் சென்று செயின் பறிக்க திட்டமிட்டிருக்கின்றனர்.
5 சவரன் தங்கச் சங்கிலியாக இருந்ததால், பறிக்கும் போது இலகுவாக வரவில்லை. இருந்தாலும், தெய்வானை ‘ திருடன்... திருடன்...’ எனக் கூச்சலிட்டதும் அருகில் இருந்தவர்கள் அந்த இரு இளைஞர்களையும் மடக்கிப் பிடித்து கட்டி வைத்து முட்டிப்போடச் செய்துள்ளனர்.
பின்னர், பாதிக்கப்பட்ட அந்த பெண்மணியும் செயின் பறிக்க வந்த இளைஞர்களிடம், ‘ யார் நீங்க.. எந்த ஏரியால இருந்து வர்றீங்க.., சம்பாதித்து சாப்பிடாமல் இப்படி திருட்டு வேலை எதுக்கு..?’ என்றும், ‘உயிர் போயிருந்தால் என்ன ஆகும் ?’ என அடுக்கடுக்காக கேள்வி கேட்டு துளைத்தெடுத்துள்ளார்.
இதற்கு திருட வந்த இளைஞர்கள் தாங்கள் தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர்கள் என்றும், ‘ எங்களை விட்டுடுங்க அக்கா...’ என்றும் அந்த பெண்மணியிடம் கெஞ்சியுள்ளனர். இதற்கிடையில் மீஞ்சூர் போலீசாருக்கு நடந்த சம்பவம் குறித்து தெரிவித்ததும் விரைந்து வந்து அந்த இரு இளைஞர்களையும் கைது செய்தனர்.
பின்னர் விசாரணையில் செயின் பறிக்க வந்த இருவரும் தண்டையார் பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்றும், செலவுக்கு பணம் இல்லாததால் திருட வந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் முழுவதையும் அங்கிருந்தவர்கள் மொபைல் போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
Also Read
-
கேரம் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன்: உணவு டெலிவரி வேலை பார்த்துக் கொண்டு சென்னை இளைஞர் அசத்தல்!
-
உலகளவில் விளையாட்டுகளில் பதக்கங்கள்... அள்ளிக்குவித்த தமிழக வீராங்கனையருக்கு முதல்வர் ஊக்கத்தொகை!
-
“உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ்” என்று எதிரிகள் புலம்புகிறார்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“தமிழ்ப் பெண்களை, வெல்லும் பெண்களாக மாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி புகழாரம்!
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!