Viral

தொடரும் சாதி ஆணவப் படுகொலைகள்: ஆதிக்க சாதி பெண்ணை திருமணம் செய்த தலித் இளைஞர் படுகொலை!

குஜராத் மாநிலம், அகமதாபாத் மாவட்டத்திலுள்ள வார்மோர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரேஷ் (25). தலித் இளைஞரான இவரும், ரஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ஊர்மிளா ஜாலாவும் காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

தொடக்கத்தில் இருந்து திருமணத்திற்கு சம்மதிக்காத ஊர்மிளாவின் பெற்றோர்கள், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, ஊர்மிளா கர்ப்பிணியாக இருக்கிறார் என்பதை அறிந்து அவரை தங்கள் வீட்டிற்கு அழைத்துள்ளனர். பெண் வீட்டில் இருந்து அழைக்கிறார்கள் என்று ஹரேஷூம் ஊர்மிளாவை அனுப்பி வைத்துள்ளார்.

ஒருவாரத்திற்கு மேல் ஆகியும் ஊர்மிளா வீடு திரும்பாதை அடுத்து ஹரேஷ் தனது மனைவியை அழைத்துவருவதற்காக, ‘அபயம்’ என்ற ஹெல்ப்லைன் மைய ஆலோசகர் பவிகா, பெண் கான்ஸ்டபிள் அர்பிதா லீலாபாய் ஆகியோருடன் ஊர்மிளாவின் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் மீது ஊர்மிளா பெற்றோர்கள் கோபத்தில் இருப்பார்கள் என எண்ணி தூரத்தில் இருந்தவாறே, தனது மனைவியின் வீட்டைக் காண்பித்து, அதிகாரிகளை அங்கு சென்று மனைவியை அழைத்து வருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையடுத்து அதிகாரிகள் அர்பிதா மற்றும் பவிகா ஆகிய 2 பேரும், ஊர்மிளாவின் வீட்டிற்குச் சென்று, அவரது தந்தை தஷ்ரத்சின், சகோதரர் இந்தரஜித்சின் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களோடு பேசி பெண்ணை அனுப்பிவைக்குமாறு கூறியுள்ளனர். சுமார் 20 நிமிடங்கள் பேசிய பின்னர், இன்னும் 1 மாதம் ஊர்மிளா தங்களுடன் இருக்கட்டும் என்று தந்தை தஷ்ரத்சின் கூறியுள்ளார்.

ஹரேஷ் & ஊர்மிளா ஜாலா

அதைக் கேட்டுக் கொண்டு, அதிகாரிகள் மீண்டும் தங்களின் வாகனத்தை நோக்கி திரும்பியுள்ளனர். அப்போது, ஹரேஷ் வாகனத்தில் இருந்துள்ளார். அவர் வாகனத்தில் இருப்பதை பார்த்துவிட்ட ஊர்மிளாவின் தந்தை தஷ்ரத் சின், ஆத்திரமடைந்து ”அவனைக் கொல்லுங்கள்” என்று கத்திக் கூச்சலிட்டுள்ளார். டிராக்டர்கள் மற்றும் பைக்குகளுடன் வாகனத்தை சுற்றி வளைத்த 8 பேர், ஹரேஷையும், தடுக்க வந்த அதிகாரிகளையும் கத்தி மற்றும் அரிவாள்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், ஹரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். பெண் கான்ஸ்டபிள் அர்பிதா படுகாயம் அடைந்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சாதி ஆணவப்படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.