Viral

நாய் நன்றி உள்ள விலங்கு - பழமொழிக்கு உதாரணமாய் உரிமையாளரைக் காப்பாற்ற உயிர்விட்ட அப்பு !

தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத்தைச் சேர்ந்த பேராசிரியர் பொன்செல்வி. இவர் அப்பகுதியில் உள்ள தனியார்க் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகின்றனர். இவரது வீட்டில் டைசன் இனத்தைச் சேர்ந்த இரண்டு நாய்களை வளர்த்து வந்தார்.

அதில் ஆண் நாய் ஒன்றுக்கு அப்பு என்றும், பெண் நாய்க்கு நிம்மி என்றும் பெயர் வைத்து குழந்தையைப் போல பாவித்து வளர்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் பொன்செல்வி வீட்டுக்கு 5 அடி நீளம் கொண்ட ஒரு பாம்பு வந்துள்ளது. பாம்பு வருவதனைக்கண்ட இரண்டு நாய்களும் குரைத்துள்ளது.

ஆனால் வீட்டிலிருந்தவர்கள் யாரும் வெளிவராத நிலையில் நாய் அப்பு, பாம்பைக் கடித்து மொட்டை மாடிக்கு எடுத்துச் சென்றது. நாய்க் கடிக்கும் போதும் பாம்பு அப்புவைக் கொத்தியுள்ளது. பின்னர் நீண்ட நேரமாகப் போராடி பாம்பை அப்பு கொன்றுள்ளது.

மறுநாள் வழக்கம் போல காலை வெளியே வந்த பேராசிரியர் வாசலில் பெண் நாய் மட்டும் இருப்பதை அறிந்து, ஆண் நாயைக் காணவில்லை என்றதும் அருகில் உள்ள இடங்களில் நாயின் பெயரை அழைத்துக் கொண்டே தேடியுள்ளார். அப்போது மாடிக்குச் சென்று பார்க்கும் போது, சதைகள் கிழிந்த நிலையில், பாம்பும், அதன் பக்கத்தில் ஆண் நாய் அப்புவும் இறந்து கிடந்துள்ளது.

தன்னை வளர்த்தவர்களுக்கு விசுவாசமாக இருந்த ஆண் நாய், வளர்த்தவர்கள் குடும்பத்தைப் பாதுகாப்பதற்கு தன் உயிர் போனாலும் பரவில்லை எனப் போராடி தானும் இறந்து, பாம்பையும் கொன்ற சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.