Tamilnadu
“தொகுதி மறுவரையறை மசோதாவில் தி.மு.க முன்வைத்த 2 கோரிக்கைகள்” : MP-க்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
இன்று (நவ.28) சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கழகத் தலைவர் அவர்களின் உரை:-
உணர்ச்சிவசப்படாமல், தொலைநோக்குப் பார்வையுடன் தொகுதி மறுவரையறைப் பிரச்சினையை நாம் அணுகியுள்ளோம்.
தொகுதி மறுவரையறை மசோதா திரும்பக் கொண்டு வரப்படும்போது தி.மு.க. என்ன நிலைப்பாடு எடுக்கும் என்றுதான் கடந்த சில மாதங்களாக இந்தியா முழுக்கப் பேசப்பட்டு வந்தது. அதற்கான தெளிவான பதிலை நேற்று நாம் கொடுத்துள்ளோம்.
தொகுதி மறுவரையறை என்ற ஒரு ஆபத்து வர உள்ளது, இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறையும் என இந்தியாவிலேயே முதன்முதலாக எச்சரிக்கை மணி அடித்தது நாம்தான். இது பற்றிய விழிப்புணர்வை எல்லோருக்கும் ஏற்படுத்தினோம். இந்திய அளவில் தலைவர்களை அழைத்துக் கூட்டம் நடத்தினோம்.
கடந்த ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் காலத்தில், நம் யாரையும் கலந்து ஆலோசிக்காமல், ஒருதலைப்பட்சமாக, எந்த உறுதியும் கொடுக்காமல் ஒரு மர்ம மசோதாவைக் கொண்டு வந்தார்கள். படித்துப் பார்க்கக்கூட உரிய கால அவகாசம் தராமல் அவசரமாகக் கொண்டு வந்த அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தோற்கடித்தோம். பா.ஜ.க.வுக்குக் கடும் அழுத்தத்தைக் கொடுத்தோம்.
தற்போது இருக்கும் தொகுதி எண்ணிக்கையே தொடரலாம் என நாம் விரும்பினாலும், தவிர்க்க முடியாத அரசியல் சாசன விதிப்படி தொகுதிகளை அதிகரிக்கும்போது, அதில் தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது என நடைமுறைக்கு ஏற்ற ('Practical'-ஆன) தீர்வை 2024-ஆம் ஆண்டே நாம் சட்டமன்றத் தீர்மானம் மூலமாக முன்வைத்தோம்.
நாம் மட்டும் குரல் எழுப்பாமல் இருந்திருந்தால், மக்கள்தொகை அடிப்படையில் வட மாநிலங்களுக்கு மட்டும் தொகுதிகளை அதிகரித்துவிட்டு, நமக்கான சதவீதத்தைக் குறைத்திருப்பார்கள். ஆனால், இன்றைக்கு மசோதாவின் நகல் கிடைத்துவிட்டது. அதில் நாம் முன்வைத்த இரண்டு முக்கியமான கோரிக்கைகளுமே இடம்பெற்றுள்ளன. இது நம்முடைய மூன்றாண்டு காலத் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி.
தற்பொழுது மட்டும் நாம் இந்த முடிவை எடுக்கவில்லை எனில், 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடைபெறுவதற்குப் பதிலாக, கடைசியாக எடுத்த கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி எண்ணிக்கையை மாற்றி அமைத்துவிடுவார்கள். அது தமிழ்நாட்டிற்குப் பேராபத்தாகிவிடும். அதை நாம் தடுத்துவிட்டோம். நாம் எதிர்பார்த்த மாதிரியே இந்த மசோதா வந்துள்ளது.
நம்மைப் பொறுத்தவரை, நாம் முன்வைத்த இரண்டு கோரிக்கைகளிலும் நாம் தற்போது வரை உறுதியாக உள்ளோம். தமிழ்நாட்டின் நலன் பறிபோகக் கூடாது, அதில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்.
அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றுவதில், நம் முயற்சியில் வெற்றி அடைந்துள்ளோம். 1967-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது 42-ஆக இருந்த தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகளை 39-ஆகக் குறைத்தார்கள்.
ஆனால், தற்போது நம்முடைய சதவீதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல், நமக்கான தொகுதிகள் உயர்வதை உறுதி செய்துள்ளோம்.
நம்முடைய கடமையை நாம் செய்துள்ளோம். இதை எல்லோரிடமும் எடுத்துச் சொல்லுங்கள். நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நம் நிலைப்பாட்டை ஓங்கிச் சொல்லுங்கள். கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படையாகச் சொல்வதில் தயக்கம் கூடாது.
எப்போது வாள் எடுக்க வேண்டும், எப்போது கேடயம் எடுக்க வேண்டும் என்பதைச் சரியாகத் தீர்மானிக்க வேண்டும் எனத் தலைவர் கலைஞர் சொல்லியிருக்கிறார். அதன்படி நடந்துகொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
Also Read
-
தொகுதி மறுவரையறை: நாடே எதிர்நோக்கிய திமுகவின் முடிவு -MPக்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
16 வயது வடமாநில சிறுவனுக்கு பாலியல் தொல்லை : காவல்துறை DSP போக்சோ சட்டத்தில் கைது
-
தமிழ்நாட்டில் மட்டும் மூலதனச் செலவினம் 11% குறையக் காரணம் என்ன? : த.வெ.க அரசுக்கு தங்கம் தென்னரசு கேள்வி!
-
தற்குறி அரசால் இன்னும் என்னென்ன வகையில் தமிழ்நாடு சீரழியப் போகின்றனவோ? : தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி!
-
தவெக எம்எல்ஏ மீது எந்த புகாரும் இல்லையா? ; எதிர்க்கட்சித் தலைவர் சொன்னதில் என்ன தவறு? : முரசொலி கேள்வி!