Tamilnadu

தொகுதி மறுவரையறை மசோதா - தி.மு.க. ஆதரிக்கக் காரணம் என்ன? - ஆ.ராசா எம்.பி. விளக்கம்!

நவம்பர் 30-ஆம் தேதி நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதில் தொகுதி மறுவரையறை மசோதாவைத் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை ஆ.ராசா எம்.பி. சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விகிதத்தில் மக்களவைத் தொகுதிகளை 50% உயர்த்தும் இந்த மசோதாவை தி.மு.க. ஆதரிக்கிறது. மேலும், தமிழ்நாட்டின் தற்போதைய 7.18% பிரதிநிதித்துவ விகிதத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

இதன் மூலம் தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகள் 39-லிருந்து 59-ஆக உயரும் என்றும், மாநிலத்தின் பங்கு 7.21%-ஆக இருக்கும் என்றும் தெரிகிறது.

ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதம் குறையக் கூடாது என்ற 'நியாயமான தொகுதி மறுவரையறை' நிலைப்பாட்டில் தி.மு.க. தொடர்ந்து உறுதியாக இருக்கிறது.

இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆலோசனையில் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டிலேயே, தி.மு.க. தற்போது இந்த மசோதாவை ஆதரித்துள்ளது. தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதில் தி.மு.க. உறுதியாக இருக்கிறது.

தென்மாநிலங்களைப் பாதிக்கும் வகையிலான தொகுதி மறுவரையறைக்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்தோம். தற்போதைய புதிய மசோதாவில் அந்த ஆபத்து நீக்கப்பட்டுள்ளது.

தி.மு.க.-விற்குக் கொள்கை வகுப்பெடுக்கும் நகைச்சுவையை காங்கிரஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும். காங்கிரஸ் தி.மு.க.-வைக் குறைகூறுவது கடைந்தெடுத்த அரசியல் அயோக்கியத்தனம்.

கூட்டணியில் இருந்து வெளியேறியதால் முடிவிலிருந்து மாறிவிட்டதாகச் சொல்வது அருவருப்பானது. நியாயமான தொகுதி மறுவரையறையில் காங்கிரஸ் கட்சிக்கு வழிகாட்டியதே தி.மு.க.தான்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “தொகுதி மறுவரையறை மசோதாவில் தி.மு.க முன்வைத்த 2 கோரிக்கைகள்” : MP-க்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு!