Tamilnadu
ஆட்சியர் விவகாரத்தில் 116 நாட்களாக முதலமைச்சர் விஜய் தூங்கிக்கொண்டிருந்தாரா?: உதயநிதி ஸ்டாலின் சாடல்!
கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புகார் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
"டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க வந்தோம். ஆனால், டி.ஜி.பி. சிங்கப்பெண் படையின் பயிற்சிக்காகச் சென்றுள்ளதாகக் கூறினார்கள். நாங்கள் கேட்பது என்னவென்றால், எங்கே இருக்கிறது இந்தச் சிங்கப்பெண் படை? அப்படி என்ன பயிற்சி கொடுக்கப்படுகிறது? அவர்களுக்கு என்னதான் வேலை?
75 சதவீதத்திற்கும் மேல் ஆளுங்கட்சி நிர்வாகிகள்தான் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக, தவறான செயல்களிலும் பாலியல் வன்முறைகளிலும் ஈடுபடுகின்றனர். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மீது எழுந்த குற்றச்சாட்டுக்கும் இதுவரை எந்தப் பதிலும் இல்லை. இப்போது, மாவட்ட ஆட்சியருக்கே ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார் த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ்.
த.வெ.க. ஆட்சிக்கு வந்ததே மே 10-ம் தேதிதான். அவர்கள் ஆட்சிக்கு வந்த முதல் 6 மாதங்களை நாம் 'ஹனிமூன் பீரியட்' என்று சொன்னோம்; கேள்வி கேட்க மாட்டோம் என்று கூறினோம். ஆனால், இதை இவர்கள் தவறாகப் புரிந்துகொண்டு, நிஜமாகவே ஹனிமூன் பீரியட் என நினைத்துவிட்டார்கள் போல.
த.வெ.க. எம்.எல்.ஏ. ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தலைமைச் செயலாளரையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஆட்சியர் ஜூலை மாதம் அளித்த புகார் குறித்து முதலமைச்சரிடம் தலைமைச் செயலாளர் தெரிவித்தாரா, இல்லையா? தெரிவித்திருந்தால், 116 நாட்களாக முதலமைச்சர் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யவே 116 நாட்கள் ஆகியுள்ளன. இந்த 116 நாட்களும் சட்டம் - ஒழுங்கைக் கையில் வைத்துள்ள முதலமைச்சர் விஜய் என்ன தூங்கிக்கொண்டிருந்தாரா?
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷைக் கண்டிக்க முதலமைச்சர் தயங்குவது ஏன்? ஒருவேளை முதலமைச்சருக்குப் பயமா? கேள்வி கேட்டால், அருள் விக்னேஷ் 'நீ என்ன ஒழுங்கா?' என்று கேட்டுவிடுவார் என முதலமைச்சர் பயப்படுகிறார் போல!
துறையூரில் புகார் அளிக்க வந்தவரைத் துணை சபாநாயகர் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் இருவரும் நண்பர்களைப் போலப் பேசும் வீடியோ வெளியான நிலையில், மிரட்டி தன்னை வீடியோ எடுக்க வைத்ததாகவும், தாக்கியது உண்மை என்றும் பாதிக்கப்பட்டவர் மீண்டும் பேட்டியளித்துள்ளார். இச்சம்பவம் நடந்து 16 நாட்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. துணை சபாநாயகர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்துள்ளோம்.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரத்தில் உண்மையை மூடி மறைக்க 4 மாதங்களாக முயற்சித்து வருகின்றனர். எனவே, இந்த அரசு மீதும், தூங்குமூஞ்சி முதலமைச்சர் மீதும் எங்களுக்குத் துளியும் நம்பிக்கை இல்லை. ஆகவே, இந்த வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும். எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை உடனே கைது செய்ய வேண்டும். அதேபோல், துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
த.வெ.க. எம்.எல்.ஏ. மீதான தற்போதைய குற்றச்சாட்டைப் போல் இந்தியாவில் வேறு எங்காவது நடந்துள்ளதா? ஒரு மாவட்ட ஆட்சியருக்கே ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்புவது, குடித்துவிட்டு முகாம் அலுவலகத்தில் ரகளையில் ஈடுபடுவதுதான் மாற்றமா? இது மாற்றமல்ல; துர்நாற்றம் வீசும் அரசு.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
கூலித் தொழிலாளிக்கு ரூ.5.53 கோடி GST நிலுவை.. வங்கியின் நோட்டீஸால் வேலூரில் பரபர - நடந்தது என்ன?
-
காரில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவன்... துப்பாக்கி முனையில் மிரட்டிய சரித்திர பதிவேட்டு குற்றவாளி.. காரணம்?
-
28 நாட்களுக்கு அன்லிமிடெட் டேட்டா : அதிரடி ஆஃபர் அறிவித்த ஜியோ நிறுவனம்!
-
“கோழைகளின் செயல்” : ஈரோட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலைகள் சேதம் - தங்கம் தென்னரசு கண்டனம்!
-
“தமிழினத்துக்கான கொடை ; காலத்தின் தேவை ‘குடிஅரசு' இதழ்” : முரசொலி தலையங்கம் புகழாரம்!