Tamilnadu

“கோழைகளின் செயல்” : ஈரோட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலைகள் சேதம் - தங்கம் தென்னரசு கண்டனம்!

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா மற்றும் முனிசிபல் காலனியில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் சிலைகளை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் சேதப்படுத்திவிட்டுத் தப்பியோடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, கலைஞர் சிலைகளைச் சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், கலைஞரின் சிலையை உடைத்தவர் மொடக்குறிச்சி தொகுதி எழுமாத்தூரைச் சேர்ந்த ஹரி விக்னேஷ் என்பதும், அப்பகுதியி தீவிர த.வெ.க கட்சிக்காரராக அவர் செயல்படுவதும் முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில், தான் வாழ்ந்த காலத்திலேயே தன் மீதான தாக்குதல்களை நெஞ்சுரத்துடன் எதிர்கொண்ட மகத்தானத் தலைவர் கலைஞர் என்று தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் ”சென்னையில் அவரது சிலையை வன்முறைக் கும்பல் திட்டமிட்டுக் கடப்பாரையால் உடைத்தபோதுகூட, “அந்த சின்னத்தம்பி என் முதுகில் குத்தவில்லை. நெஞ்சில்தானே குத்தினான்” என்று அசால்ட்டாக சொன்னவரடா அவர்!

ஈரோட்டில் நேற்றிரவு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் சிலைகள் 3 இடங்களில் சேதப்படுத்தப்பட்டிருப்பதற்கு வன்மையானக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எந்த மூடன், எவனது தூண்டுதலில் இதைச் செய்தான் என்பதை அரசும் காவல்துறையும் உடனடியாகக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்” என தெரிவித்துள்ளார்.

அதேபோல் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, ”தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், தமிழினத்தின் உரிமைகளுக்காகவும், சமூக நீதியை நிலைநிறுத்தி ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்விற்காகவும் தம் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

நவீன தமிழகத்தின் சிற்பியாகப் போற்றப்படும் ஒரு மாபெரும் தலைவரின் சிலைகளை அவமதித்திருப்பது, தமிழ் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் கோழைகளின் செயலாகும். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: “தமிழினத்துக்கான கொடை ; காலத்தின் தேவை ‘குடிஅரசு' இதழ்” : முரசொலி தலையங்கம் புகழாரம்!