Tamilnadu

“மழை பெய்வது மட்டுமே நீர் நெருக்கடிக்குத் தீர்வாகிவிடாது”: தவெக அரசுக்கு எச்சரிக்கை செய்யும் ஜவாஹிருல்லா!

தமிழ்நாட்டின் 90 நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவு: குடிநீர் மற்றும் விவசாயப் பாதுகாப்புக்குத் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:

தமிழ்நாட்டில் உள்ள 90 முக்கிய நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் இருப்பு நவம்பர் 22 நிலவரப்படி அவற்றின் முழுக் கொள்ளளவில் 36.28 சதவீதமாக மட்டுமே இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த கவலையளிக்கிறது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நீர் இருப்பு 82.78 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் பெரும் வீழ்ச்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்த நீர் இருப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 39 நீர்த்தேக்கங்களில் அவற்றின் மொத்தக் கொள்ளளவில் 25 சதவீதத்திற்கும் குறைவாகவே நீர் இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, மேட்டூர் அணையில் கடந்த ஆண்டு நவம்பர் 22 அன்று 82,876 மில்லியன் கனஅடி நீர் இருந்த நிலையில், தற்போது 25,811 மில்லியன் கனஅடி மட்டுமே உள்ளது. பவானிசாகர், வைகை, பெரியாறு உள்ளிட்ட முக்கிய நீர்த்தேக்கங்களிலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நீர் இருப்பு கணிசமாகக் குறைந்துள்ளது.

இத்தகைய நிலை குடிநீர் விநியோகம், விவசாயப் பாசனம், கால்நடை வளர்ப்பு மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள போதிலும், மழை பெய்வது மட்டுமே நீர் நெருக்கடிக்குத் தீர்வாகிவிடாது. பெய்யும் மழைநீரை முறையாகச் சேமித்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகும்.

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாகப் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்:

அனைத்து முக்கிய நீர்த்தேக்கங்கள், ஏரிகள், குளங்கள் மற்றும் கால்வாய்களின் தற்போதைய நீர் இருப்பு குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.

மழைநீர் சேகரிப்பு, ஏரிகள் மற்றும் குளங்களைத் தூர்வாருதல், நீர்வரத்துக் கால்வாய்களைச் சீரமைத்தல் ஆகிய பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களில் குடிநீர் விநியோகத்திற்கான மாற்றுத் திட்டங்களை முன்கூட்டியே தயாரிக்க வேண்டும்.

விவசாயப் பாசனத்திற்கான நீர் மேலாண்மையை விவசாயிகள் சங்கங்களுடன் கலந்தாலோசித்து வகுக்க வேண்டும்.

வறட்சியால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளைக் கண்டறிந்து விவசாயிகளுக்கும் கால்நடை வளர்ப்போருக்கும் தேவையான நிவாரண ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரைப் பெறுவதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

நீர்நிலைகளைப் பாதுகாப்பது என்பது அரசின் நிர்வாகப் பொறுப்பு மட்டுமல்ல; எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் கடமையுமாகும்.

வரவிருக்கும் மாதங்களில் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளில் நெருக்கடி ஏற்படாமல் இருக்கத் தமிழக அரசு இப்போதே திட்டமிட்ட, வெளிப்படையான மற்றும் நீண்டகால நீர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Also Read: “Reels-க்கும் Views-க்கும் ஆட்சி நடத்தும் போலிகள்” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளாசல்!