Tamilnadu

“Reels-க்கும் Views-க்கும் ஆட்சி நடத்தும் போலிகள்” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளாசல்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில், நவ. 22-ஆம் தேதி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்வில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, பெரியாரின் 'குடிஅரசு' இதழ் முழுத்தொகுப்பை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் பங்கேற்றுக் கருத்துரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், " திராவிட இயக்க இதழ்களின் தாய் என்பது 'குடிஅரசு' இதழ்தான்; ஏன், நம் முரசொலி இதழின் தாயும் 'குடிஅரசு'தான். திராவிடர் கழகத்தின் கொடியை உருவாக்கும் பொறுப்பு கலைஞர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இப்பொழுது பத்திரிகை அலுவலகங்களில் சிவப்பு மை சுலபமாகக் கிடைக்கும். ஆனால், அந்த நேரத்தில் மைகள் கிடைக்காததால், தனது கையில் ஊசியை வைத்துத் துளையிட்டு ரத்தத்தால், கருப்பு நிறக் கொடியில் வட்ட வடிவில் வரைந்து ஒரு கொடியை உருவாக்கினார். அது பெரியாரால் அங்கீகரிக்கப்பட்டு, தற்பொழுது பயன்பாட்டில் இருந்து வரும் திராவிடர் கழகக் கொடியாகும்.

சட்டமன்றத்தில் பேசுவதற்கும் இங்கு பேசுவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. என் முன் அமர்ந்திருக்கக்கூடிய அனைவரும் நன்கு படித்தவர்கள், அறிவார்ந்தவர்கள், பகுத்தறிவு உள்ளவர்கள். நான் பேசுவது உங்களுக்குப் புரியும்.

ஆனால் சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை நீங்களே தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்பீர்கள், உங்களுக்கே தெரியும்.

ஒரு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்பதில் பெருமை என்பதைவிட, 'பொறுமை' என்ற நிலையில்தான் கலந்து கொண்டிருக்கிறேன். இங்கு இருக்கக்கூடிய 'டம்மி' முதலமைச்சர், பெரியார்வாதி எனச் சொல்லிக்கொள்பவர், சில கொள்கைகளைப் பின்பற்றுவார்; சில கொள்கைகளை 'ஆப்ஷனில்' விட்டுவிடுவார்.

செஞ்சி சிறுமி விவகாரத்திற்கு முதலமைச்சர் இதுவரை வாய் திறக்கவில்லை. குழந்தையைக் கண்டுபிடிக்க வேண்டிய காவல்துறை யாகம் செய்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் எங்கு சென்றாலும் முதலில் கோயிலுக்குத்தான் செல்கிறார்.

இந்த அரசைப் பற்றி யார் என்ன கூறினாலும் அவர்களைக் கைது செய்யும். நான் 'தண்ணீர் வரவில்லை' என்று சொன்னதற்காகத்தான் என்னையும் கைது செய்தார்கள். ஆனால், டெல்லி மேலிடத்தைச் சார்ந்தவர்கள் என்ன சொன்னாலும், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் பலமுறை அவதூறாகப் பேசியுள்ளார்; அவர் மீது நடவடிக்கை எடுக்க அவர்களுக்குத் தைரியம் கிடையாது.

'குத்துனது பா.ஜ.க-வாக இருந்தாலும், வலிச்சாலும் கத்தக்கூடாது' என்பதுதான் அவர்களுக்கு உள்ள டீலிங் .

ஈராயிரம் ஆண்டு அநீதிக்கு எதிராக நூறாண்டுகளுக்கு முன்பு எதிரொலித்த 'குடிஅரசின்' கருத்து முழக்கம், 'டம்மி' முதலமைச்சரின் சர்க்கஸ் ஆட்சிக்கு எதிராக இன்றைக்கும் தேவைப்படுகிறது. திராவிட இயக்கத்தின் Intellectual Asset-ஆன இத்தொகுப்பை அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்போம்.

Reels-க்கும் Views-க்கும் ஆட்சி நடத்தும் போலிகள் – டம்மிகளிடமிருந்து தமிழ்நாட்டை மீட்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: நாகர்கோவில் ரயில் பெட்டிக்குள் பெண் வன்கொடுமை & கொலை.. DGP-க்கு கெடு விதித்த தேசிய மகளிர் ஆணையம் -விவரம்!