Tamilnadu
“டெல்டா விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத த.வெ.க அரசு” : 7 பேர் கொண்ட குழு அமைத்த தி.மு.க தலைவர்!
டெல்டா மாவட்ட உழவர்கள், பொதுமக்கள் கருத்தை அறியவும், அவர்களது கோரிக்கைகளை கேட்கவும் தி.மு.க சார்பில் 7 பேர் கொண்ட குழுவை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
த.வெ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, உணவளிக்கும் உழவர்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். உரிய நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரும் திறக்கவில்லை. வறட்சி நிவாரணமும் அறிவிக்கவில்லை. டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடி, சம்பா சாகுபடி என அனைத்திலும் முழுப்பயனை எட்ட முடியாத அளவுக்குத்தான் த.வெ.க. அரசின் செயல்பாடு இருந்து வருகிறது.
விளம்பர மோகத்தில் விவசாயிகளின் குரலைக் கேட்காமல், காலம்தவறி மேட்டூர் அணையைத் திறந்ததால், இப்போது தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்களின் நிலை பற்றியும் - அதனைக் கண்டு கண்ணீர் விடும் விவசாயிகளின் அழுகுரலும் முதலமைச்சரின் காதுகளுக்கு எட்டாத நிலைதான் நீடிக்கிறது.
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டி இருந்தால் மேட்டூர் நீர் மட்டத்தின் நிலைமை இந்தளவு குறைந்திருக்காது. கர்நாடகாவிடம் போராடி, வாதாடி அல்ல, சாதாரணமாகக் கேட்கக் கூட தயங்கும் அரசாங்கமாக த.வெ.க. அரசாங்கம் இருக்கிறது. 'மேகதாது அணையைக் கட்டினால் யாரும் கேட்க முடியாது' என்று துணிச்சலாக கர்நாடக முதலமைச்சர் சவால் விடுகிறார். அவருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேச மறுக்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர்.
இதனை உச்சநீதிமன்றம் கொண்டு சென்று, உரிமையை நிலைநாட்டுவார்கள் என்று பார்த்தால், அதிலேயும் தோல்வியை தழுவி இருக்கிறார்கள். மாதம் தோறும் தர வேண்டிய காவிரி தண்ணீரைக் கர்நாடகம் தந்தாக வேண்டும் என்று உரிமையை நிலைநாட்டாத கையறு நிலையில் உழவர் பெருமக்களின் வாழ்க்கையில் மண் அள்ளிப் போட்டுள்ளது த.வெ.க. அரசு.
எனவே நீர் பிடிப்பு பகுதியிலும் போதிய மழை இல்லை. மாநிலத்தின் பல்வேறு ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன. அணைகளில் 36 விழுக்காடுதான் நீர் இருப்பு இருப்பதாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.
இந்த நிலையில் நேரடி கொள்முதலை நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் இருந்து பறித்து கூட்டுறவு அமைப்புகளுக்கு மாற்றத் த.வெ.க. அரசு முடிவு செய்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இது உற்பத்தியையும் குறைப்பதோடு, உழவர்களையும் கடுமையாக பாதிக்கும்.
காவிரி டெல்டா பகுதியை வறட்சியால் பாதிக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கையை காதில் வாங்காமல் அவர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்காமல் புறந்தள்ளி வருகிறது ஆளும் த.வெ.க. அரசு, அத்துடன் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று சொல்லி ஆட்சிக்கு வந்த த.வெ.க. அரசு, பயிர்க்கடனில் கடன் வைத்துள்ளதைத்தான் பார்க்கிறோம். எல்லாவிதமான போராட்டத்தையும் உழவர்கள் நடத்தி விட்டார்கள். ஆட்சியாளர்கள் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை. இதுபற்றி எல்லாம் விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கும் விவசாயி விரோத த.வெ.க. அரசு செவி சாய்க்கவில்லை.
எனவே, இந்த ஒட்டுமொத்தப் பிரச்சினைகள் குறித்தும் டெல்டா மாவட்ட உழவர்கள், பொதுமக்கள் கருத்தை அறியவும், அவர்களது கோரிக்கைகளை கேட்கவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரு குழு அமைக்கப்படுகிறது.
அதன்படி,
1. திருச்சி சிவா எம்.பி.
2. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.
3. ஏ.கே.எஸ்.விஜயன்
4. துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ.
5. அருண் நேரு எம்.பி.
6. முரசொலி எம்.பி.
7. செந்தில் செல்வன், எம்.எல்.ஏ.
ஆகியோர் அடங்கிய குழு 2026 நவம்பர் 25 முதல் ஒரு வார காலம் டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தகவல்களைத் திரட்டி கழகத் தலைமைக்கு அளிக்கும்.
அதில் இருந்து பெறப்படும் உரிய கோரிக்கைகள் தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்படும். அதன்பிறகாவது டெல்டாவைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு முன்வரும் என எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“ஜனநாயகன் படத்திற்கு நிதி பெற்றதால்தான் மௌனமாக இருக்கிறீர்களா?” - விஜய்க்கு அப்பாவு கேள்வி!
-
“கலைஞரின் மனசாட்சி முரசொலி மாறன்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
-
“மழை பெய்வது மட்டுமே நீர் நெருக்கடிக்குத் தீர்வாகிவிடாது”: தவெக அரசுக்கு எச்சரிக்கை செய்யும் ஜவாஹிருல்லா!
-
“Reels-க்கும் Views-க்கும் ஆட்சி நடத்தும் போலிகள்” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
-
சீனா - ரஷ்யா - அமெரிக்கா நட்புறவு ; உலகிற்கு உணர்த்தும் செய்தி என்ன? : முரசொலி!