Tamilnadu

19 வயது இளைஞரின் முகத்தில் ஊற்றப்பட்ட கொதிக்கும் சாம்பார்.. அம்மா உணவக ஊழியரின் வெறிச்செயல்! - நடந்தது ?

சென்னை, பெரம்பூர் திரு.வி.க.நகர் தீட்டி தோட்டம், முதல் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் (19). தனது பாட்டி கௌரியுடன் வசித்து வருகிறார். தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் இவர், அதே பகுதியில் உள்ள அம்மா உணவகத்திற்கு அடிக்கடி சென்று உணவருந்துவது வழக்கம்.

அப்போது உணவு உடனடியாக வழங்க வேண்டும், சூடாக இருக்க வேண்டும் எனக் கூறி அங்குள்ள ஊழியர்களிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் இன்று (நவ.21) காலை ராஜேஷ் அங்கே உணவருந்த சென்ற ராஜேஷ், உடனடியாக உணவு வழங்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது.

அந்த சமயத்தில் உணவு சமைத்துக்கொண்டிருந்த பெண் ஊழியர் உதயபானுவுக்கும் (50), ராஜேஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த உதயபானு, கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரை கரண்டியால் எடுத்து ராஜேஷின் முகத்தில் ஊற்றியுள்ளார். இதில் அலறி துடித்த ராஜேஷை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் ராஜேஷ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்தச் சம்பவம் குறித்து திரு.வி.க.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண் ஊழியர் உதயபானுவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உணவு வழங்குவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், கொதிக்கும் சாம்பார் ஊற்றிய அம்மா உணவக பெண் ஊழியரின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வீட்டில் தனியாக இருந்த +1 மாணவி.. வீடு புகுந்து கொலை செய்த இளைஞர்.. தானும் விஷம் குடித்த அவலம் - பின்னணி?