Tamilnadu

பள்ளி சிறுமிகளிடம் அத்துமீறிய 60 வயது முதியவர்.. போலீஸ் பாதுகாப்பில் இருக்கும்போதே தப்பியோடிய அவலம்!

சென்னை புழல் அருகே வசித்து வருபவர் டேவிட்சன். 60 வயது முதியவரான இவர், ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இந்த சூழலில் அந்த பகுதியில் வசிக்கும் சிறுமிகளை தினமும் காலையில் பள்ளிக்கு அழைத்து சென்று, மாலையில் வீட்டிற்கு அழைத்து வருவதை இந்த முதியவர் வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்றும் வழக்கம் போல் பள்ளி குழந்தைகளை தனது ஆட்டோவில் அழைத்து சென்ற போது 8 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் முதியவர் டேவிட்சன். இதையறிந்த பொதுமக்கள் சிறுமியை மீட்டு, முதியவருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். மேலும் அவரை காவல் நிலையத்திலும் ஒப்படைத்துள்ளனர். அதோடு இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையும் புழல் அனைத்து மகளிர் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட முதியவரை போலீசார் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கே அவருக்கு பரிசோதனை மேற்கொண்டு வந்த நிலையில், போலீசார் கண் முன்னே அந்த முதியவர் அங்கிருந்து நேற்று (31.10.2026) தப்பியோடியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பெரவள்ளூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 5 மாதங்களில் 50-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் சிறையில் இருந்தும், மருத்துவமனையில் இருந்தும் தப்பித்து ஓடி வரும் நிலையில், தற்போது போக்சோ புகாரில் குற்றம் சாட்டப்பட்ட முதியவர் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: ஆயுதங்களுடன் மறைந்திருந்த மர்ம கும்பல்.. விசிக பிரமுகருக்கு நேரந்த சோகம்.. தூத்துக்குடியில் பயங்கரம்!