Tamilnadu

“பாத்ரூம் கூட போகவிடல”.. போராட்டத்துக்கு கிளம்பிய மருத்துவ பணியாளர்கள்.. வீட்டு காவலில் அடைத்த தவெக அரசு!

தமிழ்நாடு அரசு தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். எனினும் இதனை தவெக அரசு செவிமடுக்கவில்லை. அதோடு அதிகாரிகளும் முறையான பேச்சுவார்த்தை மேற்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

இப்படியான சூழலில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் மருத்துவ பணியாளர்கள் இன்று (அக்.12) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், இந்த உண்ணாவிரதம் போராட்டத்துக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்தது.

எனினும் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த மருத்துவ பணியாளர்கள் திட்டமிட்டிருந்தனர். அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து போராட்டத்துக்கு வருவதற்கு தயாராக இருந்த பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் மேம்பாட்டுச் சங்கத்தினரை ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இன்று காலையிலேயே பலரது வீடுகளுக்குச் சென்ற காவல்துறையினர், முக்கிய நிர்வாகிகளை வீட்டுக்காவலில் வைத்தனர். அந்த வகையில் கிருஷ்ணகிரியில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டவர்களை வழிமறித்து பிடித்த காவல்துறையினர், அவர்களை பேருந்தில் ஏறவிடாமல் வீட்டுக்கு அழைத்து வந்து வீட்டு காவலில் வைத்துள்ளனர்.

இது போன்று பல்வேறு மாவட்டங்களில் போலீசார் அத்துமீறி செயல்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மருத்துவ பணியாளர்கள், தங்களைப் பயங்கரவாதிகளைப் போல் காவல் நிலையத்தில் அடைத்து வைத்திருப்பதாகவும், கழிவறைக்கு கூட செல்லவிடவில்லை என்றும் வீடியோ வெளியிட்டு வேதனை தெரிவித்துள்ளனர்.

மருத்துவ பணியாளர்கள் மீதான தவெக அரசின் இந்த அடக்குமுறைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தங்கள் ஞாயமான கோரிக்கையை அரசு காது கொடுத்து கேட்கவும் தயாராக இல்லை என்றும், எங்கள் குரலை ஒடுக்கப்பார்ப்பதாகவும் தவெக அரசு மீது பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு தற்போது கண்டனங்கள் எழுந்து வருகிறது.

Also Read: திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச்சாயம் - பிரதமர் மோடியை வரவேற்று, வழி அனுப்பிய விஜய் கண்டனம் தெரிவித்தாரா?