Tamilnadu

“புதுச்சேரி - கொலைச்சேரி ; திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

புதுவை மாநிலம், தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் சேது செல்வம் அவர்களை ஆதரித்து, கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொலி வாயிலாக மேற்கொண்ட பரப்புரையின் விவரம்:-

அன்பார்ந்த தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி வாக்காள பெருமக்களுக்கு என் இனிய வணக்கம். உங்களை எல்லாம் இந்தக் காணொலி வாயிலாகச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். .தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியிலும் மக்களின் நலத்துக்கும் வளத்துக்கும் – பல்லாண்டு காலமாகப் பங்காற்றிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பது புதுவை மக்களாகிய உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

1979-ஆம் ஆண்டு புதுச்சேரியின் தனித்தன்மையை காக்க, பாண்டுரங்கன் என்ற கழகத் தோழரையே இழ்ந்து, புதுவைக்கு வந்த சோதனையை தடுத்து நிறுத்தியது தி.மு.க. கடந்த சில ஆண்டுகளாகவே துணைநிலை ஆளுநர்கள் மூலமாக, ஆபத்து வந்தபோதும் இந்த மாநிலத்துக்காகப் போராடிய இயக்கம் தி.மு.க. புதுச்சேரியில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடந்தபோதெல்லாம், புதிய புதிய திட்டங்களை இந்த மாநிலத்துக்கு நிறைவேற்றி இருக்கோம். சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்ற தலைவர் கலைஞரின் வாக்குப்படி, புதுச்சேரியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு இருக்கிறோம். தாலிக்கு தங்கம் திட்டம், சத்துணவில் முட்டை திட்டம், இதோ, உங்கள் கண்ணெதிரே சிறப்பாகச் செயல்பட்டு வரும் லாஸ்பேட்டை உழவர்சந்தை போன்றவை, கழக அரசின் காலத்தை வெல்லும் சாதனைகள். இதை எல்லாம் மனதில் வைத்து, நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தட்டாஞ்சாவடி வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் எதிர்கொண்டிருக்கும் இந்த இடைத்தேர்தல், இயற்கையாக நடக்கும் தேர்தல் கிடையாது.

இது, உங்கள் மேல் திணிக்கப்பட்ட தேர்தல்! முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள், கடந்த பொதுத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் நின்றார். வெற்றியும் பெற்றார். சட்டப்படி, ஒரு தொகுதியில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதியக் கைவிட்டுவிட்டார். அதாவது, அவரை நம்பி வாக்களித்த உங்களைக் கைகழுவி விட்டார். அதனால், இந்த முறை நீங்களும் அவரை கைவிட்டு விடுங்கள். இந்த இடைத்தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி வேட்பாளராக ஒருவரை முதல்வர் ரங்கசாமி நிறுத்தியிருக்கிறார். அவர் யார் என என்னைவிட உங்களுக்கே நன்றாகத் தெரியும். கடந்த தேர்தலில், அந்த நபர் போட்டியிட நீதிமன்றம் ஏன் தடை விதித்தது என்றும் உங்களுக்குத் தெரியும்.

அப்படிப்பட்ட ஒருவரைத்தான் முதல்வர் ரங்கசாமி வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார். மறுபுறம், காங்கிரஸ் கட்சியும் அவர்கள் பங்குக்கு ஒரு வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார்கள். என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ஊழல் சாம்ராஜ்ஜியத்துக்கு சொந்தக்காரர் என்றால், இந்த காங்கிரஸ் வேட்பாளர் சாராய சாம்ராஜ்ஜியத்திற்கு சொந்தக்காரராக இருக்கிறார் எனப் புதுவையில் எல்லோருக்குமே தெரிந்துள்ளது. ஆனால், தி.மு.கழக வேட்பாளர் அருமைச் சகோதரர் சேது செல்வம், எளிய, நேர்மையான பின்புலம் கொண்டவர். அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தில் பிறந்த, பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பிரதிநிதிதான் நமது கழக வேட்பாளர் திரு. சேது செல்வம் அவர்கள். தொழிலாளர்களுக்காகப் போராடிச் சிறை சென்றிருக்கிறார். அவரை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடிய ஒருவரை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறோம்.

சேது செல்வம் அவர்களை நீங்கள் தேர்ந்தெடுத்தால் உங்களுக்காக உண்மையாக உழைப்பார் என உறுதியளிக்கிறேன். கடந்த காலங்களில், இந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ரங்கசாமி அவர்கள் உங்களுக்காக செய்த நன்மைகள் என எதுவுமே இல்லை. அதைவிட கொடுமை இந்த தொகுதிக்கு ஒரு MLA அலுவலகம் கூட இல்லை. இது அவமானம் இல்லையா? நீங்கள் நமது சேது செல்வத்துக்கு உதயசூரியன் சின்னத்த்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்தால், உங்களின் நீண்டகால கோரிக்கையான இலவச வீட்டு மனைப்பட்டா கிடைக்க, உரிய நடவடிக்கைளைச் செய்வார். தட்டாஞ்சாவடியில் இருக்கும் தொழிற்பேட்டையில் புதிய தொழிற்சாலைகள் அமையப் பாடுபடுவார். இந்த தொகுதியில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சினைக்கும் தீர்வு காண்பார். தேர்தல் சீசனில் மட்டும் வந்து, பத்து நாள் திருவிழா மாதிரி தலையைக் காட்டிவிட்டுப் போகிறவர் அல்ல நம் வேட்பாளர்!

“இந்த இடைத்தேர்தலில் தட்டாஞ்சாவடித் தொகுதியில் தி.மு.க. வென்று ஆட்சியா மாறப் போகிறது?” எனச் சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்வது, ஆட்சி மாற்றம் நடந்தாலும், நடக்காவிட்டாலும் தொகுதியின் காட்சி மாற்றம் நடக்கும். என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க., கூட்டணி ஆட்சியில் புதுச்சேரி, கொலைச்சேரியா மாறிவிட்டது. ஒரு வாரத்துக்கு சர்வசாதாரணமா நான்கு கொலையாவது நடக்கிறது. பட்டப்பகலில் ஒரு கொலை, நண்பகலில் ஒரு கொலை, மாலை ஒரு கொலை, நள்ளிரவிலும் கொலை என அடுக்கடுக்கான படுகொலைகள் நடக்கிறது என நாளிதழ், டி.வி.யில் எல்லாம் பார்த்தேன். முதல்வர் ரங்கசாமி என்னதான் செய்துகொண்டு இருக்கிறார்? உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?

குற்றவாளிகள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சொல்ல கூட வாய் திறக்காத ஆட்சிதான் இப்ப்போது இங்கே நடக்கிறது. டபுள் இஞ்சின் சர்க்கார் இருந்தால் நல்லாட்சி நடக்கும் எனச் சொன்னார்கள். ஒரு இஞ்சினும் இங்கே வேலை செய்வது மாதிரி தெரியவில்லையே. சட்டம் ஒழுங்குச் சீரழிவும், நிர்வாகச் சீர்குலைவும் புதுச்சேரியை வாட்டி வதைத்துக்கொண்டு இருக்கிறது. இதையெல்லாம் தட்டிக் கேட்க நமது சேது செல்வம் போன்ற ஒரு MLA வெற்றி பெற வேண்டும்! அவர் சட்டமன்றம் போனால் எதிர்கட்சியின் குரலுக்கு வலு சேர்ப்பார். அதனால்தான் சொன்னேன், ஆட்சி மாறினாலும், மாறாவிட்டாலும் காட்சி மாறும்! தனக்கு பிரச்சினை வரும்போது மட்டும்தான், மாநில அந்தஸ்து அஸ்திரத்தை முதலமைச்சர் ரங்கசாமி கையில் எடுப்பார். சட்டமன்றத்தில் தீர்மானம் போட தெரிந்த ரங்கசாமி அவர்களே! அதிகாரிகள் தடுக்கிறார்கள் எனக் கூப்பாடு போடும் ரங்கசாமி அவர்களே!

புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டுமென, சட்டமன்ற உறுப்பினர்களை டெல்லிக்கு அழைத்துக் கொண்டு போய், போராடலாமே? ஏன் செய்ய மாட்டேன் என்கிறீர்கள்? உங்கள் கூட்டணிக் கட்சியிடம்தானே ஒன்றிய அரசு இருக்கிறது? கடந்த தேர்தலிலேயே புதுவைக்கு மாநிலத் தகுதி பெற்றுத் தருவேன் எனக் சொல்லித்தானே ஆட்சிக்கு வந்தீர்கள்? நம்பி வாக்களித்த மக்களுக்கு என்.ஆர்.காங்கிரசும், பா.ஜ.க.,வும் செய்ததெல்லாம் துரோகம் மட்டும்தான்! இன்னொரு துரோகமும் களத்தில் நிற்கிறது. கடந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகில் குத்திய காங்கிரஸ் கட்சி இங்கு களம் காண்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், ஐந்து தொகுதிகளில் கழக வேட்பாளர்களை எதிர்த்து, கூட்டணியில் இருந்துகொண்டே வேட்பாளர்களை நிறுத்தியது காங்கிரஸ் கட்சி. ஆனாலும், தி.மு.க துரோகத்தை வென்றெடுத்தது.

காலாப்பட்டு, ராஜ்பவன் தொகுதிகளில் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். துரோகிகள் படுதோல்வி அடைந்தனர். அதே தோல்வியை இந்த தட்டாஞ்சாவடி தொகுதியிலும் காங்கிரஸ் கட்சிக்குப் பரிசளிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு டெப்பாசிட் கூட கிடைக்க கூடாது. புதுச்சேரியைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி முடிந்துபோன அத்தியாயம். நமக்கு எதிராக நிற்கும் இந்த இரண்டு வேட்பாளர்களுக்கும் இந்த இடைத்தேர்தல் மூலம் பாடம் புகட்ட வேண்டும். சட்டமன்றத்தில் உங்கள் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்றால், நமது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கழக வேட்பாளர் சேது செல்வம் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என மீண்டும் உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி, வணக்கம்.

Also Read: தொடர் அட்ராசிட்டி... கிராம சபைக் கூட்டத்தை நடத்திய தவெக நிர்வாகிகள்.. சேலத்தில் அதிர்ச்சி! | VIDEO