Tamilnadu
பள்ளி வளாகத்திலேயே பெண் குழந்தைக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியிருக்கிறது : தமிழச்சி தங்கபாண்டியன் MP!
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கண்டிகை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு என்ன நடந்தது என்பது குறித்து பள்ளி நிர்வாகமோ அல்லது காவல்துறையினரோ முறையான விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இன்று காலை வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் உள்ள கண்டிகை சந்திப்பில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சம்பவத்தின் உண்மைத் தன்மை குறித்து வெளிப்படையாக மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து, தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் ”வண்டலூர் - கண்டிகை அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றது.
பட்டப்பகலில் பள்ளி வளாகத்திலேயே ஒரு பெண் குழந்தைக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியிருப்பது, தமிழகத்தில் பள்ளி மாணவிகளின் பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது என்ற தீவிரமான கேள்வியை எழுப்புகின்றது. குழந்தைகள் பாதுகாப்பாக கல்வி கற்க வேண்டிய பள்ளியே அச்சத்திற்குரிய இடமாக மாறிவிடக் கூடாது.
குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்வதில் முழு கவனம் செலுத்த வேண்டிய காவல்துறை, சம்பவத்தின் உண்மைத் தன்மை குறித்து வெளிப்படையாக மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு தேவையான மருத்துவ மற்றும் உளவியல் சிகிச்சை, பாதுகாப்பு மற்றும் சட்ட உதவிகள் முழுமையாக வழங்கப்பட வேண்டும். சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளி வளாகங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு உடனடியாக ஆய்வு செய்து, கண்காணிப்பு, பாதுகாப்பு மற்றும் புகார் அளிக்கும் நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“இது யாருக்கான ஆட்சி? கேடுகெட்ட ஆட்சியை தவெக நடத்திக் கொண்டிருக்கிறது” : கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!
-
மாணவிக்கு பாலியல் தொல்லை : இதுதான் பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் லட்சணமா? - DMK IT Wing கேள்வி!
-
வண்டலூர் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை.. வாய்கிழிய பேசிய முதலமைச்சர் எங்கே? : உதயநிதி கண்டனம்!
-
கழிப்பறைக்கு சென்ற 10 ஆம் வகுப்பு மாணவி : வண்டலூர் அருகே நடந்த கொடூர சம்பவம்!
-
“சதிச்செயல்களில் ஈடுபட்டுள்ள ஞானேஷ்குமார் இனியும் பதவியில் நீடிக்கக் கூடாது” : முரசொலி வலியுறுத்தல்!