Tamilnadu

கழிப்பறைக்கு சென்ற 10 ஆம் வகுப்பு மாணவி : வண்டலூர் அருகே நடந்த கொடூர சம்பவம்!

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கண்டிகை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மதியம் பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைக்குச் சென்ற அந்த மாணவியை, மர்ம நபர்கள் சிலர் தூக்கிச் சென்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. பிறகு மயங்கிய நிலையில் இருந்த மாணவியை மீட்டு முதலுதவிக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இது குறித்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு என்ன நடந்தது என்பது குறித்து பள்ளி நிர்வாகமோ அல்லது காவல்துறையினரோ முறையான விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இன்று காலை வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் உள்ள கண்டிகை சந்திப்பில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளிக்கு முறையான பாதுகாப்பு வழங்க வேண்டும், காவலாளிகளை நியமிக்க வேண்டும் மற்றும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

“பள்ளிக்குள்ளேயே நடந்த சம்பவத்தில் குற்றவாளிகளை ஏன் கண்டுபிடிக்கவில்லை? பெற்றோர் கேள்வி கேட்டால் பள்ளி நிர்வாகம் அலட்சியப்படுத்துவதாக” மாணவியின் தாய் வேதனையுடன் கூறியுள்ளார். மேலும், "பெண்களுக்கு பாதுகாப்பே கிடையாது, எங்களுக்கு நிம்மதியே இல்லை.. இந்த ஊரு எம்.எல்.ஏ. எங்கே?" எனவும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதோடு, விஜய் மதுராந்தகம் வந்தா எந்த செய்தியும் வெளிய வரக்கூடாதா? முதலமைச்சர் வந்து போகும் வரை காத்திருந்து நாளைக்கு சொல்லுவாங்களா? பாம்பு கடிச்சிருச்சுனு செய்தி போட சொல்லுராங்க, இதுவரைக்கும் எந்த மாணவிக்கு என்ன நடந்துச்சுனு விளக்கம் கொடுக்கவில்லை என மக்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also Read: நேற்று விஜய் அறிவுறுத்தல்.. ஆனா இன்று.. ஒரே நாளில் தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் அடுத்தடுத்து மின்வெட்டு!