Tamilnadu

நேற்று விஜய் அறிவுறுத்தல்.. ஆனா இன்று.. ஒரே நாளில் தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் அடுத்தடுத்து மின்வெட்டு!

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, குற்றச்சம்பவங்கள் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. இதில் பெரும்பாலான குற்றச்செயல்களில் தவெக-வை சேர்ந்தவர்களே ஈடுபட்டு வருகின்றனர். கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, சிறுமி வன்கொடுமை, ஏமாற்று வேலை என அனைத்து குற்றச்சம்பவங்களிலும் தவெக-வினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதோடு தமிழ்நாட்டு மக்களுக்கு என்று எந்த ஒரு நலத்திட்டத்தையும் தொடங்கி வைக்காத தவெக அரசு, மாறாக மின்வெட்டு பிரச்சினையை உருவாக்கியுள்ளது. ஆட்சி அமைந்ததில் மின்வெட்டு பிரச்சினை தொடர்ந்து இருக்கிறது. பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடி வரும் சூழலில் கூட தவெக அரசு கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.

இரவு பகல் என நேரம் காலம் இன்றி தினமும் மின்வெட்டு ஏற்படுவதால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்படுகிறது. அதோடு மாணவர்கள் படிக்க முடியாமலும் தவித்து வருகின்றனர். இதனால் இந்த அரசுக்கு தொடர்ந்து கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில், வழக்கம்போல் எல்லாவற்றுக்கும் காரணம் திமுக தான் என்று கூறி தப்பிக்க முயன்று வருகிறது.

ஆரம்பத்தில் மின்தடைக்கு காரணம் திமுக என்று கூறி வந்த தவெக, தற்போது காற்று குறைவாக வீசுவதால், மழை இல்லாததால் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதே மின்வெட்டு காரணம் என்று கூறி வருகிறது. முதல்வர் விஜயின் பெரம்பூர் தொகுதியில் கூட மின்வெட்டு பிரச்சினை இருப்பதால், மக்கள் வீதிக்கு வந்து போராடி வரும் நிலையில், விஜய்யும் அதனை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.

இப்படியாக மின்வெட்டு தொடர் பிரச்சினையாக உள்ளதால், நேற்று ஆய்வு மேற்கொண்ட முதல்வர் விஜய், மின்வெட்டு பிரச்சினையை சரி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், தற்போது தவெக அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தவெக ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண் ராஜ், விஜய் பாலாஜி, பர்வேஸ், ராஜேஷ்குமார், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் விஜய் பாஸ்கர், எம்.எஸ்.எம்.ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் செங்கோட்டையன் பேசிக்கொண்டிருக்கும் போது, திடீரென மின்சாரம் தடைப்பட்டதால் சற்று சலசலப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகளுக்கு அங்குள்ள நிர்வாகிகள் ஒருவர் மாற்றிய ஒருவர் அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தனர். அமைச்சர்கள் கூட்டத்திலும் மின்வெட்டு ஏற்பட்டது, தவெக-வினர் மத்தியில் சற்று பேசுபொருளாக மாறியுள்ளது.

இது ஒரு புறம் இருக்க, மற்றொரு பக்கம் மதுராந்தகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்துண்டிப்பு ஏற்பட்டது. இதனால் சற்று திகைத்த அமைச்சர், உடனே 'ஜெனரேட்டர் போடுங்க..' என்று கூறினார். நேற்று முதல்வர் விஜய் அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், இன்று அமைச்சர்கள் கூட்டத்தில் அடுத்தடுத்து மின்வெட்டு ஏற்பட்டது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

Also Read: தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் சட்டென Power Cut... TENSION ஆன செங்கோட்டையன்!