Tamilnadu

விளம்பர வெறியால் கருகும் சம்பா பயிர்கள்.. விவசாயிகளை கண்டுகொள்ளாமல் இருக்கும் விஜய்.. - உதயநிதி விளாசல்!

"காவிரியில் தண்ணீர் வரத்து இல்லை, எனவே டெல்டா விவசாயிகள் இந்த ஆண்டு சம்பா சாகுபடியைக் கைவிடுவது நல்லது" என்று வேளாண் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் தவெக அரசின் நிர்வாக சீர்கேட்டால் விவாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டன பதிவு வருமாறு :-

விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா?

இந்த Dummy ஆட்சியாளர்களின் விளம்பர வெறியால், சம்பா பயிரைக் காப்பாற்ற முடியுமா என்ற அச்சத்தில் டெல்டா விவசாயிகள் தவித்து வருகின்றனர். குறுவை சாகுபடிக்கு திறக்க வேண்டிய நேரத்தில் மேட்டூர் அணையை திறக்காமல் முதலமைச்சர் விவசாயிகளை வஞ்சித்தார்.

இந்த சூழலில், “சம்பா சாகுபாடிக்கு அணையின் நீர்மட்டம் உயர்ந்த பிறகு செப்டம்பர் இறுதியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்” என்று விவசாயிகள் சொன்னதை ஏற்காமல், வெற்று விளம்பரத்துக்காக செப்டம்பர் 1-ஆம் தேதியே திறந்து வைத்தார்.

தற்போது அணைக்கான நீர்வரத்து 4000 கன அடி என குறைந்துவிட்ட நிலையில், அணையின் நீர் மட்டமும் 40 அடியை நோக்கி குறைந்து கொண்டு செல்கிறது. இதனால் கடை மடை வரை தண்ணீர் சேருவதும் - பயிரின் பூப்பு நேரத்தில் தண்ணீர் வருவதும் சந்தேகம் என்பதால், சம்பா சாகுபடியை திட்டமிட்டப்படி செய்ய முடியாது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குறுவை சிறப்பு தொகுப்புக்கும் – வறட்சி நிவாரணத்துக்கும் வித்தியாசம் புரியாமல் பேசிய முதலமைச்சர், இன்றைக்கு பேப்பரை படித்திருந்தால் விவசாயிகளின் இந்த அவலநிலை புரிந்து இருக்கும். ஆற்றுப்பாசனத்தை நம்பி சம்பா சாகுபடியில் இறங்க வேண்டாம் என்று வேளாண் வல்லுநர்கள் கூறும் அளவிற்கு நிலைமையை மோசமாக்கி வைத்துள்ளது இந்த Circus அரசாங்கம்.

அடுத்த ஜென்மத்தில் விவசாயியாக பிறப்பேன் என்று வெற்று வசனங்களை பேசிய முதலமைச்சருக்கு, முழு பயிர்க்கடன் கேட்டுப் போராடும் விவசாயிகளை சந்திக்ககூட மனம் வரவில்லை. திருச்சியில் போராடிய விவசாயிகளிடம் 5 நிமிடம் மட்டுமே அதிகார திமிரோடு பேசிவிட்டு சென்ற அமைச்சர்களை கண்டித்து அதற்கு ஒரு போராட்டம் நடத்தும் அளவில் தான் இந்த Reels வெறி ஆட்சி இருக்கிறது.

விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிக்காமல், வேளாண் பெருங்குடி மக்களுக்கு வறட்சி நிவாரணத்தையும், முழுப்பயிர்க்கடன் தள்ளுபடியையும் இந்த அரசு உடனே வழங்க வேண்டும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட முடியாது என்று விடாப்பிடியாக இருந்ததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இந்த விவாகரத்துக்கு கண்டனம் தெரிவித்தும் கூட, முதல்வர் விஜய் மௌனம் காத்தார்.

அதோடு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி செயல்படும் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவிக்காமல், கர்நாடகாவுக்கு நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக நாடகம் ஒன்றையும் நடத்தினர். இறுதியில் அவர் கர்நாடகாவுக்கும் செல்லவில்லை, உடனடியாக தண்ணீரும் வரவில்லை.

ஜூன் மாதத்துக்கு முன்பே திறந்துவிட பட்டிருக்க வேண்டிய தண்ணீர், முதல்வர் விஜயின் கையாலாகாத்தன ஆட்சியின் காரணமாக 75-80 நாட்கள் தாண்டி செப்டம்பர் மாதத்தில் திறந்து விடப்பட்டது. அதுவும் எதிர்க்கட்சிகளின் தொடர் அழுத்தம், போராட்டம், விவசாயிகள் ஆங்காங்கே போராட்டம், கண்டனம், ஆர்ப்பாட்டம் என மேற்கொண்டதால் நடந்தது.

எனினும் விஜய் தண்ணீர் திறந்துவிடுவதற்காக மேட்டூர் அணைக்கு வந்துவிட்டு சென்றதற்கான விளம்பர செலவு மட்டுமே சுமார் ரூ.5 கோடி என்று சொல்லப்படும் நிலையில், தனது வேற்று விளம்பர அரசியலால் தற்போது விவசாயிகளை கடும் அவதிக்கு உள்ளாக்கியுள்ளது இந்த தவெக அரசு.

Also Read: த.வெ.கவுக்கு அடிப்படைப் புரிதல் கூட இல்லை : நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் - ஆர்.எஸ்.பாரதி புகார் மனு!