Tamilnadu

சினிமாவை மிஞ்சிய தங்கக் கடத்தல் : சென்னை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன? சிக்கியது எப்படி?

சென்னை சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் ரகசியமாகக் கடத்திக் கொண்டு வரும் தங்கத்தை, அவர்கள் சுங்கச் சோதனையில் சிக்காமல் வெளியில் எடுத்துச் செல்வதற்கு, சென்னை விமான நிலையத்தில் பணியில் உள்ள சுங்கத்துறை சி-குரூப் ஊழியர்களான ஹவில்தாரர்கள் சிலர் உடந்தையாக இருப்பதாக, சென்னை தியாகராய நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை தனிப்படையினர் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமானப் பயணிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். இந்தக் கண்காணிப்பு தொடர்ந்து சில நாட்கள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு துபாயில் இருந்து, இலங்கை வழியாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த இலங்கையைச் சேர்ந்த 2 பயணிகள், தங்களிடம் சுங்கத் தீர்வை செலுத்த வேண்டிய பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு, விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல முயன்றனர்.

ஆனால், அங்கு பணியில் இருந்த சுங்கத்துறை அதிகாரிகள் இருவர், அந்த இலங்கைப் பயணிகள் இருவரையும் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி, அவர்களது உடைமைகளைச் சோதனையிட்டனர். ஆனால், உடைமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும், சந்தேகம் தீராததால், இலங்கைப் பயணிகள் இருவரையும் விமான நிலைய எக்ஸ்ரே பிரிவுக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு பயணிகளுக்கு எக்ஸ்ரே எடுக்காமல், ஏற்கனவே எக்ஸ்ரே எடுக்கப்பட்டு, பயணிகளின் உடலில் எதுவும் இல்லை என்று வந்திருந்த இரண்டு எக்ஸ்ரே முடிவுகளின் நகல்களுடன் வெளியே வந்து, சுங்க அதிகாரிகளிடம் அந்த எக்ஸ்ரே நகல்களைக் காட்டி, இவர்களிடம் கடத்தல் தங்கம் எதுவும் இல்லை என்று கூறினர்.

இதைத் தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த டி.ஆர்.ஐ. தனிப்படை அதிகாரிகள், உடனடியாக அங்கு வந்து, அந்த 2 பயணிகள் மற்றும் 2 ஹவில்தாரர்களை அழைத்துக் கொண்டு எக்ஸ்ரே அறைக்குச் சென்றனர்.

அங்கிருந்த எக்ஸ்ரே ஊழியர்களைத் தவிர்த்து விட்டு, டி.ஆர்.ஐ. அதிகாரிகளே பயணிகளுக்கு எக்ஸ்ரே எடுத்தனர். அந்த எக்ஸ்ரே அறிக்கையில், இரண்டு பயணிகளின் உடலில் ஆசனவாய்க்குள் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அதிரடியாகச் செயல்பட்ட டி.ஆர்.ஐ. அதிகாரிகள், இலங்கையைச் சேர்ந்த தங்கம் கடத்தல் பயணிகள் 2 பேர், சுங்கத்துறை ஹவில்தாரர்கள் 2 பேர், எக்ஸ்ரே பிரிவு ஊழியர்கள் 2 பேர் என மொத்தம் 6 பேரைக் கைது செய்தனர்.

அதோடு, பயணிகள் இருவரின் ஆசனவாய்க்குள் இருந்த தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். இரண்டு பயணிகளிடம் இருந்து 2.6 கிலோ, 24 கேரட் சுத்தமான தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்தத் தங்கக் கட்டிகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.4 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்பு, 6 பேரையும் டி.ஆர்.ஐ. அதிகாரிகள் சென்னை தியாகராய நகரில் உள்ள டி.ஆர்.ஐ. அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, பல மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். அதன்பின்பு, 6 பேரையும் சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

அதோடு, டி.ஆர்.ஐ. அதிகாரிகள் இவர்கள் 6 பேரையும் மீண்டும் சில நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த இருப்பதாகவும், அப்போது இந்தக் கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? இவர்கள் இதுபோல் எவ்வளவு காலமாகத் தங்கக் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்? இதன் பின்னணியில் யார் யார் உள்ளனர்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த விசாரணைக்குப் பின்பு, சுங்கத்துறை சம்பந்தப்பட்ட மேலும் சிலரும் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. சுங்கத்துறையினரின் உதவியுடன் சென்னை விமான நிலையத்தில் நடந்ததாகக் கூறப்படும் இந்தத் தங்கக் கடத்தல் சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா படத்தில் வரும் காட்சி போல் சென்னை விமான நிலையத்தில் நடந்துள்ள இந்தச் சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “39,000 அடி உயரம்.. நடுவானில் அலறிய பயணிகள்?” : உடனடி உதவியில் இறங்கிய சென்னை ஏர்போர்ட் - நடந்தது என்ன?