Tamilnadu
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பிரம்மகுண்டம் பேருந்து நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கில்லி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சென்ற பட்டியலினத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் இரண்டு பேர் மீது, கில்லி விளையாட்டின் குச்சி விழுந்துள்ளது.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இதனை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரத்தை தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி அன்று அரசு மேல்நிலைப் பள்ளியில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த மோதலின் காரணமாக மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 8 பேர், பட்டியலின மாணவர்களில் ஒருவரை பள்ளி வளாகத்திலேயே சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர் இதுகுறித்து தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பள்ளிக்கு வந்த பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் நியாயம் கேட்டுள்ளனர்.
ஆனால் பள்ளி நிர்வாகம் அதனை பெரிதுப்படுத்த வேண்டாம் என கூறியதாக சொல்லப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி நுழைவாயில் முன் முற்றுகையிட்டு சம்பந்தப்பட்ட மாணவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடபொன்பரப்பி காவல்துறை பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மாணவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில், குற்றச்செயலில் ஈடுபட்ட மாற்று சமூகத்தை சேர்ந்த 8 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் எஸ்பி தலைமையில் விசாரணை நடைபெற்ற நிலையில், குற்றச்செயலில் ஈடுபட்ட 8 மாணவர்கள் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தது. விளையாட்டால் ஏற்பட்ட மோதலில் பள்ளி மாணவர்கள் 8 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!
-
“24 மணி நேரத்தில் 8 கொலைகள்.. தினமும் எகிறும் Crime Rate” : தவெக அரசுக்கு கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!
-
எழுச்சியுடன் நடந்த திமுக முப்பெரும் விழா.. விருதுகளை வழங்கி சிறப்பித்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
Dummy முதலமைச்சரின் ஆட்சியில் காற்றில் பறக்கும் சட்டம் - ஒழுங்கு : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சாடல்!