Tamilnadu

சென்னை விமானநிலையம் - தனியார்மயமாக்கும் பாஜக அரசின் முயற்சிக்கு துணை போகும் தவெக: தமிழச்சி தங்கபாண்டியன்!

தி.மு.க ஆட்சியில் 90% பணிகள் முடிந்த நிலையில் இருந்த பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை, த.வெ.க ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்துவிட்டது. 'இதற்காக விவசாய நிலங்களைத் தொடவிட மாட்டேன்' என்று முதலமைச்சர் விஜய் வீரவசனம் பேசினார். ஆனால், தற்போது சென்னை விமான நிலையத்தைத் தனியார்மயமாக்க த.வெ.க அரசின் ரகசியத் திட்டம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதாவது, சென்னை விமான நிலைய நிர்வாகத்தைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கக் கோரி முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் கடந்த ஆகஸ்ட் மாதம் எழுதப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து இன்றுதான் இத்தகவல் வெளியே கசிந்துள்ளது. 'வெளிப்படைத்தன்மையுடன் இந்த அரசு செயல்படும்' எனப் பேசிய முதலமைச்சர் விஜய், இக்கடிதத்தை மட்டும் ஏன் இவ்வளவு ரகசியமாக வைத்திருந்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், த.வெ.க அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தி.மு.க நாடாளுமுன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி ”சென்னை விமான நிலையத்தை நிர்வகித்து வரும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை (AAI) மாற்றி, வேறு ஆபரேட்டரைக் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பாரத பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை விமான நிலைய செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்ய ஒன்றிய அரசிடம் உரிய அழுத்தம் கொடுப்பதற்குப் பதிலாக, AAI-யை மாற்றி வேறு ஆபரேட்டரைக் கொண்டு வர வேண்டும் என முதலமைச்சர் கோருவது ஏன்? விமான நிலையத்தை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு தமிழக அரசு துணை நிற்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட்டதாக அறிவித்துவிட்டு, மறுபுறம் இருக்கும் சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க முயல்வது குறித்து முதலமைச்சர் தமிழ்நாடு மக்களுக்கு வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டின் பொதுச் சொத்துகளை தனியார் நலன்களுக்காக தாரை வார்க்கும் எந்த முயற்சியையும் எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் குரல் கொடுக்கும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: “அசிங்கப்படுவது விஜய் மட்டுமல்ல, தமிழ்நாடும்தான்” : விஜய்யின் லண்டன் பயணத்தை விமர்சித்த முரசொலி!