Tamilnadu

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் : சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன?

இன்று நடைபெற்ற (செப்டம்பர் 02) சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசுக்கு கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது வருமாறு :-

பேரவைத் தலைவர் அவர்களே, ஆளுங்கட்சியினரின் தேர்தல் வாக்குறுதிகளில், தூய்மைப் பணியாளர்களுக்குப் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற வாக்குறுதிகள் முக்கியமானவை.

வாக்குறுதிகள் எல்லாம் உடனே நிறைவேற்றப்பட வேண்டும் என்று, சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இன்றுடன் சேர்த்து அவர்களின் போராட்டம் 15-வது நாளை எட்டியிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு, இந்த அவையில் இந்த அரசின் கவனத்துக்கு நாங்கள் எடுத்து வரும்போது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வெகு விரைவில் இதற்கு ஒரு நல்ல தீர்வு ஏற்படும் என்று, இந்த அவையில் பதில் சொல்லியிருக்கிறார். ஆனால், இதுவரைக்கும் எந்த சுமுகமான முடிவும் எட்டப்படவில்லை.

இந்தத் துறைக்குப் பொறுப்பு வகிக்கின்ற முதலமைச்சரை, அவர்கள் எல்லோரும் நேரடியாக சந்தித்து அவர்களின் கோரிக்கையை வைக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய முதலமைச்சர் அவர்கள் சென்ற ஆண்டு, இதேமாதிரி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் செய்யும்போது அவர்களின் கட்சி அலுவலகத்துக்கு அழைத்து வந்து, அவர்களை எல்லாம் சந்தித்து பேசியிருக்கிறார்.

எனவே, எங்களின் கோரிக்கை, நாங்கள் கேட்க விரும்புவது, இந்த அரசின் கவனத்துக்கு எடுத்துவர விரும்புவது, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை, முதலமைச்சர் எப்போது நிறைவேற்றிக் கொடுப்பார். தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்து முதலமைச்சர் அவர்கள் பேசுவாரா என்பதை, இந்த அவையின் கவனத்துக்கு எடுத்து வந்து அமர்கிறேன்.

பேரவைத் தலைவர் அவர்களே, எங்கள் ஆட்சிக் காலத்தில் போராட்டம் நடந்தது. இங்கே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேசும்போது, `100 நாட்களைத் தாண்டி போராட்டம் நடந்தது’ என்று சொன்னார்கள், அப்படியானால் நீங்களும் 100 நாட்கள் தாண்டும் வரை காத்திருக்கப் போகிறீர்களா என்ற கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்.

எங்கள் ஆட்சியில் போராட்டம் நடந்தபோது, எங்களின் அப்போதைய அமைச்சர் சேகர்பாபு அவர்கள், வணக்கத்திற்குரிய மேயர் பிரியா அவர்களெல்லாம் தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து சந்தித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இப்போது ஆட்சியில் இருக்கும்போது ஒரு அமைச்சர்கூட அந்தப் போராட்டக் களத்துக்குச் சென்று அவர்கள் யாரையும் இதுவரை சந்திக்கவில்லை. ஆட்சியில் இல்லாதபோது தூய்மைப் பணியாளர்களைச் சந்திக்க தயாராக இருந்த இன்றைய முதலமைச்சர் அவர்கள், இப்போது தூய்மைப் பணியாளர்களைச் சந்திக்க மறுப்பது ஏன் என்று கேட்க விரும்புகிறேன்.

பேரவைத் தலைவர் அவர்களே, 110- விதியின் கீழ் முதலமைச்சர், பல்வேறு அறிவிப்புகளைக் கொடுத்திருக்கிறார். அதில் வழக்குகள் எல்லாம் வாபஸ் பெறப்பட்டுள்ளன என்று அறிவித்திருக்கிறார்கள். அதைப்பற்றித்தான் இப்போது விவாதம் போய்கொண்டிருக்கிறது.

இங்கு ஒரு அமைச்சர் பேசும்போது, இதுதான் வரலாற்றிலேயே முதல்முறை என்று பேசியிருக்கிறார். அது சரியான தகவல் இல்லை. எங்களின் ஆட்சியின்போது, எங்கள் தலைவர், `குடியுரிமை திருத்தச் சட்டம், `வேளாண் சட்டம்’, `8 வழிச்சாலை போராட்டம்’, அமைச்சர் அண்ணன் வன்னியரசு அவர்கள் சொன்னதுபோல, `கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு’, `மீத்தேன் எதிர்ப்பு போராட்டம்’ உள்ளிட்டப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை, எங்கள் தலைவர் முதலமைச்சராக இருக்கும்போது வாபஸ் பெற்றுள்ளார்.

ஒன்றே ஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். அப்போது எங்களின் தலைவர், முதலமைச்சர் அவர்கள் 110-விதியின் கீழ் அறிவிக்கவில்லை. அதிகாரிகளை அழைத்துச் சொல்லிவிட்டு, இந்த வழக்குகளை எல்லாம் வாபஸ் செய்கிறோம் என்று இந்த அவையில் தெரிவித்தார். இன்னும் ஒரேயொரு விஷயம். வேளாண்துறை அமைச்சர் குறிப்பிட்டு பேசும்போது, விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் என்ற வார்த்தையை சொல்லியிருக்கிறார். அதை நீக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு சட்டப் பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரை ஆற்றினார்.

Also Read: GST சரிவால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : த.வெ.க அரசுக்கு கேள்வி எழுப்பிய டி.ஆர்.பி.ராஜா!