தமிழ்நாடு

மேட்டூர் அணை தாமதத் திறப்பால் ஏற்படும் பாதிப்புகள் : தவெக அரசுக்கு சுட்டிக்காட்டிய MRK பன்னீர்செல்வம்!

கால்வாய்ப் பாசனத்திற்குத் தண்ணீர் வராததால், நிலத்தடி நீரை நம்பி ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கும் நீரின்றிப் பயிர்களைக் காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

மேட்டூர் அணை தாமதத் திறப்பால் ஏற்படும் பாதிப்புகள் : தவெக அரசுக்கு சுட்டிக்காட்டிய MRK பன்னீர்செல்வம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

த.வெ.க அரசு மேட்டூர் அணை தாமதத் திறப்பால் ஏற்படும் முக்கிய பாதிப்புகளை விளக்கி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

கடந்த தி.மு.க. ஆட்சியின் சாதனைகளுள் ஒன்றாக, வழக்கமாகத் திறக்கப்படும் ஜூன் 12-ஆம் தேதிக்குப் பதிலாக, இந்த நிர்வாகத் திறனற்ற த.வெ.க. ஆட்சியில் அணைகள் தாமதமாகத் திறக்கப்பட்டதால், ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மாதத்திற்குள் அறுவடை செய்யப்படும் குறுவைப் பருவ நெல் சாகுபடி முற்றிலுமாகக் குறைந்துள்ளது.

எந்தவிதத் திட்டமும் இன்றி தற்போது தாமதமாகத் திறக்கப்பட்டுள்ள மேட்டூர் அணையினால் தங்களுக்கு என்ன பயன் என்று டெல்டா விவசாயிகள் விரக்தியோடு கேள்வி எழுப்புகின்றனர். விவசாயிகளும் விவசாயச் சங்கங்களும் முன்வைக்கும் நியாயமான கருத்துகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது இப்போது அவசியமாகிறது.

நிலத்தடி நீர்மட்டம் குறைவு:-

கால்வாய்ப் பாசனத்திற்குத் தண்ணீர் வராததால், நிலத்தடி நீரை நம்பி ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கும் நீரின்றிப் பயிர்களைக் காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

போதிய தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் பெரும் கடன் சுமைக்கு ஆளாக நேரிடுவதுடன், ஏற்கனவே கடன் தள்ளுபடியில் இந்த அரசின் குழப்பங்களால் விவசாயிகள் மிகப்பெரிய பாதிப்பில் இருக்கின்றனர். லட்சக்கணக்கான டன் நெல் உற்பத்தி இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியிருக்கிறது.

சம்பா சாகுபடியில் நிலவும் சிக்கல்களும் சவால்களும்:-

பருவகால மழை மற்றும் அணையின் நீர்வரத்தைப் பொறுத்தே அடுத்தடுத்த சாகுபடிப் பணிகளைத் தொடங்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், விவசாயிகளுக்குப் பயிர் சாகுபடி குறித்த நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும் ஒட்டுமொத்த விவசாயச் சுழற்சிக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஒரு போக சம்பா மற்றும் தாளடி சாகுபடிப் பயிர்கள் முழுமையாக வளர்ந்து அறுவடைக்கு வர 120 முதல் 140 நாட்கள் வரை தண்ணீர் தேவைப்படும். ஆனால், தற்போதைய அணை நீர் இருப்பைக் கொண்டு (சுமார் 54 டி.எம்.சி.) அரசு முதற்கட்டமாக 45 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கத் திட்டமிட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களின் ஒட்டுமொத்த சம்பா, தாளடி சாகுபடிக்கு சுமார் 205 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும் நிலையில், அணையில் தற்போது பாதி அளவு மட்டுமே நீர் இருப்பது விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது

பருவகால மாறுதல் ஆபத்து:-

வழக்கமாக சம்பா பயிர்கள் அக்டோபர் மாத வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் ஓரளவிற்கு வளர்ந்து, மழையைத் தாங்கும் நிலையை எட்டியிருக்கும். ஆனால், தற்போது செப்டம்பர் மாதத்தில் சாகுபடி தாமதமாகத் தொடங்குவதால், அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பெய்யும் கனமழையினாலும் வெள்ளத்தினாலும் இளம் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் அதிகரித்துள்ளது.

பொருளாதார மற்றும் உற்பத்தி இழப்புகள்,நெல் உற்பத்தி குறைதல் :-

மேட்டூர் அணை தாமதமாகத் திறக்கப்பட்டதன் காரணமாக, தமிழக டெல்டா மாவட்டங்களில் மட்டும் சுமார் 12 லட்சம் டன் நெல் உற்பத்தி இழப்பு ஏற்படலாம் என வேளாண் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

கடைமடைப் பகுதிகளுக்கு நீர் சேர்வதில் தாமதம் - காய்ந்து கிடக்கும் ஆறுகள்:-

நீண்ட நாட்களாக ஆறுகள் மற்றும் பாசன வாய்க்கால்கள் காய்ந்து கிடப்பதால், அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் நிலத்தில் உறிஞ்சப்பட்டு, டெல்டாவின் கடைமடைப் பகுதிகளுக்குச் (நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களின் இறுதிப் பகுதிகள்) சென்றடையக் கூடுதல் நாட்களாகும். இதனால், அங்குள்ள விவசாயிகளுக்குப் பாசன நீர் கிடைப்பதில் மேலும் தாமதம் ஏற்படும்.

வடகிழக்குப் பருவமழை மற்றும் கர்நாடகாவிலிருந்து வர வேண்டிய காவிரி உபரி நீர் ஆகியவற்றை மட்டுமே நம்பி இனி சம்பா சாகுபடியின் தலைவிதி உள்ளது. இவை இரண்டுமே இந்த ஆட்சியில் கானல் நீரான நிலையில், விவசாயம் மிகப்பெரிய கேள்விக்குறியாகியிருக்கிறது.

கடந்த தி.மு.கழக ஆட்சியில் குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் முறையாகத் தூர்வாரப்பட்டு, நிலத்தடி நீரை உயர்த்தத் தொலைநோக்குத் திட்டத்தோடு செயல்படுத்தப்பட்டதால், நீர்நிலைகள் அதிகமான தண்ணீரைச் சேமிக்கத் தயாராக இருக்கும் நிலையில், தற்போது திறக்கப்படும் தண்ணீர் அந்த நீர் சேமிப்பு ஆதாரங்களை நிறைக்குமா என்பதும் சந்தேகமே.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories