Tamilnadu
பரந்தூர் விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டது ஏன்? – பேரவையில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!
பரந்தூர் விமான நிலையத்தை கைவிட்டால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட கூடிய இழப்புகள் குறித்தும், பரந்தூர் இடம் ஏன் தேர்வு செய்ப்பட்டது என்பது குறித்தும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், ”சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துப் பல்வேறு கட்டங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது நில அமைப்பு, சுற்றுச்சூழல், பாதுகாப்பு, வான்வெளி கட்டுப்பாடுகள், மக்கள் அடர்த்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன.
சென்னையின் கிழக்குப் பகுதியில் வங்கக்கடல் அமைந்துள்ளதால், அந்தத் திசையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என ஆய்வில் தெரியவந்தது. வடக்குப் பகுதியில் மணலி, எண்ணூர் உள்ளிட்ட முக்கிய தொழிற்பேட்டைகள் அமைந்துள்ளன. மேலும், பழவேற்காடு ஏரி போன்ற முக்கியமான சுற்றுச்சூழல் பகுதிகள் இருப்பதால், அப்பகுதியில் விமான நிலையம் அமைப்பதில் பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும் எனக் கண்டறியப்பட்டது.
சோழிங்கநல்லூர் உள்ளிட்ட தெற்குப் பகுதிகள், தாம்பரம் விமானப்படை தளத்தின் வான்வெளி எல்லைக்குள் வருகின்றன. இதனால் பாதுகாப்புத்துறை தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக, அப்பகுதிகள் பரிசீலனையில் இருந்து நீக்கப்பட்டன. மேலும், கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் தெற்குத் திசையில் அமைந்திருப்பதும் விமான நிலைய இடத் தேர்வில் தடையாகக் கருதப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சென்னையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பன்னூர் மற்றும் பரந்தூர் ஆகிய இடங்கள் புதிய விமான நிலையத் திட்டத்திற்காகத் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன.
இந்த ஆய்வில், உயர் மின்னழுத்தப் பாதைகள் (EHV Lines), பெரிய தொழிற்சாலைகள், நிலத்தின் விலை, மக்கள் வசிப்பிடங்கள் மற்றும் நிலம் கையகப்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஒப்பீடு செய்யப்பட்டன. இந்த ஆய்வுகளின் அடிப்படையில், பரந்தூரில் பெரிய தொழிற்சாலைகள் குறைவாக இருப்பதும், நிலத்தின் விலை ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதும், மக்கள் இடம்பெயர்வு குறைவாக இருக்கும் சூழல் நிலவுவதும் உள்ளிட்ட காரணிகள் சாதகமாக அமைந்தன.
இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) மற்றும் ஒன்றிய அமைச்சகமும் இது குறித்து முறையான ஆய்வு மேற்கொண்டன. பரந்தூர் இடத் தேர்வு என்பது மாநில அரசின் தனிப்பட்ட முடிவு அல்ல என்றும், AAI உள்ளிட்ட சம்பந்தப்பட்ட உயர்மட்ட அமைப்புகள் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை ஆய்வு செய்த பின்னரே பரந்தூர் இடத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளன.
தற்போது செயல்பட்டு வரும் சென்னை விமான நிலைய வளாகத்திலேயே இரண்டாவது ஓடுதளத்தை அமைப்பது, அதனைச் சுற்றியுள்ள அதிக மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகளில் பெருமளவு நிலங்களைக் கையகப்படுத்துவது போன்ற நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது. இதற்கு மாறாக, பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், 2,000-க்கும் மேற்பட்ட பட்டா நில உரிமையாளர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறி வரும் நிலையில், அதற்குத் தேவையான தொழில் வளர்ச்சி, சர்வதேச வர்த்தகம், முதலீடுகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கு மிகப்பெரிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் அவசியமாகும். சென்னைக்கு இரண்டாவது பன்னாட்டு விமான நிலையம் அமைவது மாநிலத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்றும், இத்தகைய திட்டத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் முதலீட்டு வாய்ப்புகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்” என தெரிவித்தார்.
Also Read
-
“பத்திரிக்கைகளைப் பற்றி இப்படிப் பேசக் கூடாது” : பேரவையில் தவெக அமைச்சருக்கு அறிவுரை வழங்கிய தி.மு.க!
-
“தமிழர்கள் படுகொ* செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது; த.வெ.க அரசு நடவடிக்கை எடுக்குமா?” : உதயநிதி கேள்வி!
-
“அருமை நண்பர் கேப்டன் அவர்களின் புகழ் நீடுவாழ்க!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!
-
ஆசிரியர் தகுதித் தேர்வு : தி.மு.க ஆதரவுடன் சட்டப்பேரவையில் நிறைவேறிய தீர்மானம் என்ன?
-
முதலமைச்சர் ஆனாலும், தான் ஒரு ஆடம்பர நடிகர்தான் என்பதை சொல்லிவிட்டார் விஜய்! : முரசொலி தலையங்கம்!