Tamilnadu

தொகுதி மறுவரையறை : இதுதான் தி.மு.க-வின் நிலைப்பாடு - பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொகுதிமறுவரையை எதிர்த்து, தனித்தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் கொண்டுவந்தார். இந்த தீர்மானத்தின்மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசியது வருமாறு:-

தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு எந்தப் பாதிப்பும் வரக் கூடாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடு!மக்கள் தொகை அடிப்படையில் புதிதாகத் தொகுதி மறுவரையறை கொண்டு வந்தால், அது எவ்வளவு பெரிய ஆபத்தாக அமையும் என்பதை இந்தியாவிற்கே முதன்முதலில் எடுத்துரைத்த இயக்கம், என்னுடைய திராவிட முன்னேற்றக் கழகமும், எங்களின் தலைவருமே ஆவர்!

தொகுதி மறுவரையறை என்ற பெயரில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது! தொகுதி மறுவரையறைக்கு எதிராக, கடந்த 2024ஆம் ஆண்டு திமுக தலைவரும் அப்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.அதற்கு முன்னதாக, கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, அதில் இத்தீவிரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, மார்ச் 5ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் கலந்து கொண்டு, கட்சியின் அதிகாரப்பூர்வக் கருத்தை வெளியிட்டார்.தொடர்ந்து, மார்ச் 7ஆம் தேதி நாட்டின் பிற 7 மாநில முதலமைச்சர்களுக்கும், மற்ற மாநில அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இது தொடர்பாகக் கடிதம் எழுதினார்.

மார்ச் 22ஆம் தேதி, 5 மாநில முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை ஒன்றிணைத்து, கூட்டுக் நடவடிக்கைக் குழு கூட்டத்தைக் கூட்டினோம்.2026ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை நிர்ணயித்தால், தென் மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் தொகுதிகளும் பெருமளவில் குறைந்துவிடும்.

அதே நேரத்தில், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாத வட மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிடும். எனவே, தொகுதி மறுவரையறைத் திட்டத்தை அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தள்ளி வைக்க வேண்டும்; இப்போதைக்கு நடத்தக் கூடாது. மாறாக, 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே தொகுதி மறுவரையறை நீடிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தோம்.

1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே இதனைச் செய்ய வேண்டும். அதில் ஏதேனும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டால், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் மற்றும் குரல், தற்போது இருக்கக்கூடிய 7.18 விழுக்காட்டிலிருந்து எக்காரணத்தைக் கொண்டும் குறைந்துவிடக் கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். அரசின் இந்தத் தீர்மானத்தை நாங்கள் முழுமையாக வரவேற்கின்றோம்!

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Also Read: தவெக அரசின் தனித்தீர்மானத்தால் எதுவும் செய்யமுடியாது; தமிழ்த்தாயையுமா ஏமாற்ற வேண்டும்? : முரசொலி காட்டம்!