Tamilnadu

திராவிட மாடல் திட்டங்களை காப்பி அடித்த முதலமைச்சர் விஜய் : இதுதான் த.வெ.க அரசின் பெரிய சாதனை!

முரசொலி தலையங்கம் (07-08-2026)

’ஷோபா மாடல் ஸ்டிக்கர்கள்...’

தமிழ்நாட்டை ஆளும் ‘ஷோபா மாடல்’ ஆட்சியானது தினந்தோறும் புதுப்புது ஸ்டிக்கர்களைத் தயாரித்து வருகிறது. சொந்தமாகச் சிந்தித்து எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றத் துப்பு இல்லாத இன்றைய ஆட்சியானது, முந்தைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் திட்டங்களின் பெயரை மாற்றி ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு இருக்கிறது. நேற்றைய தினம் வெளியான நிதிநிலை அறிக்கையே ஸ்டிக்கர்களின் தொகுப்பாக இருக்கிறது.

• கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை மகளிர் உரிமைத் தொகை ஆக்கிவிட்டார்கள்.

• நான் முதல்வன் திட்டத்தை வெற்றித் திறன் பயிற்சித் திட்டம் என மாற்றி விட்டார்கள்.

• கலைஞர் கனவு இல்லம் திட்டம், வெற்றி வீடுத் திட்டம் எனச் சொல்கிறார்கள்.

• அன்புச்சோலைகள், இனி மூத்தகுடிமக்கள் பொழுது போக்கு மையமாம்.

• உலகம் உங்கள் கையில் என்பதற்கு வெற்றி மடிக்கணினி திட்டமாம்.

• முதல்வர் படிப்பகங்கள் இனி டிஜிட்டல் நூலகம் என அழைக்கப்படுமாம்.

• நன்னிலம் மகளிர் நில உடமைத் திட்டம், மண்ணின் மகள் திட்டம் என மாற்றப்பட்டுள்ளது.

• விலையில்லா மிதிவண்டி திட்டத்துக்கு நவீன மிதிவண்டித் திட்டம் என்று பெயர்.

• தகைசால் பள்ளிகளை இனி பெருந்தலைவர் காமராசர் சிறப்புப் பள்ளி என மாற்றி இருக்கிறார்கள்.

• ஆடு, செம்மறி ஆடு ஊக்குவிப்புத் திட்டத்துக்கு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் என ஆக்கி இருக்கிறார்கள்.

– இப்படி அனைத்துக்கும் புதுப்பெயர் வைத்து, புதுப்பெயிண்ட் அடித்து பழைய வீட்டையே புதுவீடு கட்டியது போல மாற்றி விட்டார் முதலமைச்சர் விஜய். எவ்வளவு பெரிய சாதனை இது? நாளைய தினம் தனது சாதனை என்று சொல்லும் போது இந்தப் புதுப் பெயர்களைச் சொன்னால் போதும். அவர் தொடங்கிய புதுத் திட்டமாக இவை அனைத்தும் ஆகிவிடும்.

தமிழ்நாட்டில் போதைப் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க திராவிட மாடல் அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம், ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற திட்டமாகும். இத்திட்டம் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இதையே இவர்களும் அறிவித்திருக்கிறார்கள்.

தி.மு.க. ஆட்சியில் செயல்பட்ட பிங்க் பேட்ரோல் (Pink Patrol) திட்டத்தை ஸ்டிக்கர் ஒட்டி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என மாற்றினார்கள். இந்த படைக்காக காவலர்களை நியமிக்காமல் ஏற்கெனவே உள்ள காவலர்களை இந்தப் படையில் சேர்த்து மறுபெயர் இட்டிருக்கிறார்கள்.

“தமிழ்நாட்டை 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி கொண்ட மாநிலமாக மாற்றுவதே எனது இலக்கு ஆகும்” என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசுத் துறையின் அனைத்துக் கூட்டங்களிலும் சொன்னது ஆகும். அதையே, “2036–ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்வதற்கு தமிழ்நாடு பணியாற்றி வருகிறது” என்று சொல்லி இருக்கிறார்கள். இவை அனைத்துமே திராவிட மாடலை அப்படியே பின்பற்றுவது ஆகும்.

திராவிட மாடல் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கும், தமிழ்நாட்டில் காலம் காலமாக இருந்த திட்டங்களுக்கும் முன்னால் ‘வெற்றி’ என்பதைச் சேர்த்து விட்டார்கள். அவ்வளவு தான் விஜய் செய்திருக்கும் சாதனை.

மதுபானங்களை எலைட் பார்களில் வாங்கிக் கொள்ளலாம் என்பதைத் தவிர த.வெ.க. அரசு சுயமாக எந்தப் புதிய திட்டத்தையும் அறிமுகம் செய்யவில்லை. 717 மதுபானக் கடைகளை மூடியதாகச் சொல்லி விட்டு அதை விட அதிகமான எலைட் பார்களை விஜய் திறந்து வைத்திருப்பது தான் இந்த ஆட்சியின் ஒரே சாதனை ஆகும்.டாஸ்மாக் மதுவகைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் ‘வெற்றி மாடல் அரசின்’ திட்டம் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்க வேண்டியது ஆகும். மதுக்கடைகளை மூடி விட்டதாக விஜய்க்கு பாராட்டு பத்திரம் வாசித்தவர்கள், ‘இந்த ஆண்டு டாஸ்மாக் மூலமாக ரூ.55 ஆயிரம் கோடி வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது’ என்று நிதித்துறை செயலாளர் சித்திக் அளித்த பேட்டிக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

தேர்தலுக்கு முன்னதாக விஜய் கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. சில ‘தனியாருக்கு’ கொடுத்த வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றி வருகிறார்.

மகளிர் உரிமைத்தொகை 2500 ரூபாய், ஆண்டுக்கு இலவச 6 சிலிண்டர், தமிழகம் முழுவதும் மகளிருக்கு இலவச பேருந்து, வேலையில்லா இளைஞர் களுக்கு மாதம் 4000, முழு பயிர் கடன் தள்ளுபடி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கடன் முழுவதும் தள்ளுபடி, கிராமங்கள் முழுவதும் அனைவருக்கும் வீடு, முதியோர் உதவி தொகை ரூ.3000, விவசாயிகளின் குழந்தைகளுக்கு இலவச கல்வி, பால் கொள்முதல் விலை உயர்வு என த.வெ.க.வின் தேர்தல் வாக்குறுதி எதுவும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை.

விஜய் அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் ஏதுமில்லை. அதனால் தான் ‘0’ என்ற மதிப்பெண்ணை எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் கொடுத்துள்ளார். எதுவும் இருக்காது, எதிர்பார்க்க வேண்டாம் என்பதற்காகத்தான் முன்பு வெள்ளை அறிக்கையே வெளியிட்டார்கள்.

மாற்றம் மாற்றம் என்பது பெயரை மாற்றுவதாக மட்டுமே உள்ளது. ஸ்டிக்கர் ஒட்டுவதாக மட்டுமே உள்ளது. கடந்த ஒரு மாதமாக பல்வேறு துறை ஆய்வுக்கூட்டங்களை முதலமைச்சர் விஜய் நடத்தினார். அதில் என்ன முடிவெடுத்தார்கள்? பெயரை மாற்றுவது பற்றித்தான் முடிவெடுத்துள்ளார்கள் என்று தெரிகிறது. எந்த ஆய்வுக் கூட்டத்திலும் முதல்வர் பேசுவது இல்லை என்கிறார்கள். அவர் வாயைத் திறந்து பேசாமல் இருப்பது கூட நல்லது தான். ஏனென்றால், ‘வாயில ஏதாவது வந்திடும்’ என்பது அவரது புகழ்பெற்ற பொன்மொழி ஆகும். இத்தகைய புண்மொழிகளை உதிர்க்காமல் அவர் பேசாமல் இருப்பது கூட ஒருவிதத்தில் நல்லதுதான்.

சுயமாகச் சிந்திக்கும் திறனற்ற, யாரோ எழுதியதைப் பார்த்து அப்படியே காப்பி அடிக்கும் பழக்கம் மட்டுமே உள்ள முதலமைச்சராக விஜய் இருக்கிறார் என்பது அவரது ஆட்சியின் முதல் நிதி நிலை அறிக்கையிலேயே தெரிந்துவிட்டது.

Also Read: உதயநிதி ஏற்படுத்திய எழுச்சி : தனக்குத் தானே ‘சூனியம்' வைத்துக் கொண்ட முதலமைச்சர் விஜய்!