Tamilnadu

விஜய் இனியும் கீழ்த்தரமாகப் பேசினால்... : ஆர்.எஸ்.பாரதி விடுத்துள்ள எச்சரிக்கை என்ன?

த.வெ.க குதிரை பேரத்தில் ஈடுபட்டது தொடர்பாக ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது; ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"குதிரை பேரத்தில் விஜய் ஈடுபட்டார் என்பதற்குத் கடந்த 4ஆம் தேதி ஆளுநரைச் சந்தித்துப் புகார் கொடுத்தோம். அந்தப் புகாரில் வைகோவின் பேச்சை வைத்துப் புகார் கொடுத்துள்ளோம். அதேபோல், தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளிப்படையாகச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கிறார். இவையெல்லாம் குதிரை பேர ஊழலுக்குத் தகுந்த ஆதாரங்கள் எனச் சுட்டிக்காட்டும் வகையில் திமுக சார்பில் ஆளுநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் கொடுத்துள்ளோம்.

ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம்.கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பேசியது உண்மைக்கு மாறாகவும், கரூர் வழக்கை பாதிக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது என்பதைத் தெளிவாக சிபிஐ-யிடமும், கரூர் வழக்கைக் கண்காணிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதியிடமும் மனுவாகக் கொடுத்துள்ளோம்.விஜய் உண்மைக்கு மாறாகத்தான் பேசி வருகிறார்.

கொளத்தூரில் 'கொத்து பரோட்டா' என விஜய் கீழ்த்தரமாகப் பேசியுள்ளார்.எடப்பாடி பழனிசாமி இன்று தெளிவாகப் பதில் சொல்லியிருக்கிறார்; நாங்கள் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலை எனப் பேசியிருக்கிறார்.விஜய் இனியும் கீழ்த்தரமாகப் பேசினால், இனி நாங்களும் பேச வேண்டி வரும்" என்று எச்சரித்தார்.

மேலும், இனிமேல் கூட்டணியில் இருந்த கட்சித் தலைவர்கள் குறித்துப் பேச வேண்டாம். இதற்குப் பதில் சொல்லும்போது முக்கியமான பிரச்சினைகள் பேசப்படாமல், திசை திரும்பிவிடுகிறது.இப்படித்தான் கடந்த தேர்தலின்போது செத்த பாம்பை அடித்துவிட்டு, கருநாகத்தை விட்டுவிட்டோம். அந்தத் தவறை மீண்டும் செய்ய மாட்டோம் என்றார்.

ஆறு மாதங்களில் திமுக ஆட்சி அமைக்கும் என அனிதா ராதாகிருஷ்ணன் பேசியது குறித்த கேள்விக்கு, அனிதா ராதாகிருஷ்ணன் அவரது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்" என்று கூறினார்.

முன்னதாக, தி.மு.க-வின் புகார் கடிதத்தைத் திமுக வழக்கறிஞர்கள் ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று வழங்கினர்.

Also Read: 41 பேர் பச்சைப் படுகொலைக்கு காரணமாக இருந்து விட்டு... : வஞ்சக விஜய்யின் பேச்சுக்கு முரசொலி கடும் தாக்கு!