Tamilnadu
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
திராவிட மாடல் அரசு கொண்டு வந்த, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை திட்டத்தை, தங்கள் அரசு கொண்டு வந்தது போல சித்தரிக்கும் த.வெ.க அரசு, ஒரு மாரத்தான் போட்டியை முறையாக நடத்த முடியாமல் அம்பலப்பட்டு நிற்கிறது என திமுக தகவல் தொழில்நுட்ப அணி கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பக்கத்தில் “சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, Start Run, Stop Drugs என்ற பெயரில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்திருந்த மாரத்தான் நிகழ்வுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. வழக்கம் போல, முதலமைச்சர் ரீல்ஸ் வெளியிடுவதற்கான போட்டோ ஷூட் போல இந்த மாரத்தான் இருந்ததே தவிர, இந்த நிகழ்வால் யாருக்கும் எந்த பயனும் இல்லை.
நிகழ்ச்சி ஏற்பாட்டிலும் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. முதலமைச்சர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்கள், ரீல்ஸ் வெளியிடும் இன்ஃப்ளூயன்ஸர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதால், காலகாலமாக மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர். முதலமைச்சர் விஜய் அரசுப் பேருந்தில் பயணித்தபோது, முழுக்க முழுக்க அதிகாரிகளும், காவல்துறையினரும் மட்டுமே அந்தப் பேருந்தில் இருந்தது போல, மராத்தான் ஓட்டத்திலும் முழுக்க முழுக்க செட் அப் செய்தவர்களே இருந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.
முதலமைச்சருடன் ஓடப்போகிறோம் என அதிகாலை 4 மணிக்கே ஆர்வத்துடன் காத்திருந்தவர்களும், குறித்த நேரத்தில் போட்டி தொடங்கவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளனர். மாரத்தானில் பங்கேற்க விண்ணப்பித்திருந்த பலருக்கும் அதற்குரிய சீருடைகள் கொடுக்காததால், அவர்கள் SDAT அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்வதையும் பார்க்க முடிகிறது.
சென்னை மவுலிவாக்கத்தில் போதையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, அமைச்சர் சரத்குமார் பொதுவெளியில் போதைப் பொருள் பயன்படுத்தியது என, போதையின் நடமாட்டத்தை தோலுரித்துக் காட்டும் செய்திகள் வெளியாகும் அதேவளையில், மறுபுறம் முதலமைச்சர் போதைப்பொருள் விழிப்புணர்வு ஓட்டம் ஓடுவதும், அதை இந்தியாவிலேயே முதன்முறையாக 3 கி.மீ. ஓடிய இளம் முதலமைச்சர் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புகழ்வதும் நகை முரண்.
திராவிட மாடல் அரசு கொண்டு வந்த, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை திட்டத்தை, தங்கள் அரசு கொண்டு வந்தது போல சித்தரிக்கும் த.வெ.க அரசு, ஒரு மாரத்தான் போட்டியை முறையாக நடத்த முடியாமல் அம்பலப்பட்டு நிற்கிறது. எத்தனையோ மாரத்தான் போட்டிகளை தனியார் அமைப்புகள் சத்தமில்லாமல் நடத்தி இருக்கிறது. ஆனால், முதலமைச்சரின் இன்றைய Quota-வுக்கான Reels எடுக்கும் நிகழ்வாக இந்த மாரத்தான் நிகழ்வை மாற்றியது கேவலம்.” என விமர்சித்துள்ளது.
Also Read
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!