Tamilnadu

இளம்பெண் மீது கார் ஏற்றிப் படுகொலை : சென்னையை உலுக்கிய கொடூரம்!

தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இளம் பெண் ஒருவர் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அனிச்சங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் யாசினி. இவர் தனது தோழிகளுடன் கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர மதுபான விடுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு நடனமாடிக் கொண்டிருந்தபோது, மற்றொரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விடுதி பாதுகாவலர்கள் இரு தரப்பினரையும் வெளியேற்றியுள்ளனர்.

இதையடுத்து, யாசினியும் அவரது தோழியும் இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் நோக்கிச் சென்றபோது, அந்த இளைஞர் கும்பல் காரில் அவர்களைத் துரத்தியுள்ளது. . அப்போது தற்காப்புக்காக யாசினி தரப்பினர் கார் மீது கல்வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கும்பல், கோயம்பேடு மேம்பாலம் அருகே யாசினியின் இருசக்கர வாகனத்தின் மீது காரை வேகமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட யாசினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த அவரது தோழி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து, பாலகுரு, ஜோசுவா, கிஷோர் குமார் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் பெண் மீது கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: ”விஜயின் ஆட்சி '20 நாள் இருண்ட காலம்'.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு” : முரசொலி கடும் விமர்சனம்!