Tamilnadu
“பிரச்சார Mode-ல் இருக்கும் விஜய்; தமிழ்நாட்டின் பாதுகாப்புச் சக்தி திமுக” : எழிலன் நாகநாதன் பேட்டி!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க மருத்துவரணிச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மருத்துவர் எழிலன் நாகநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "முதலமைச்சர் விஜய் செய்தியாளர்களைச் சந்தித்து உங்கள் கேள்விகளுக்குப் பதில் கூறுவார் என்று நானும் காத்துக்கொண்டிருக்கிறேன்; ஆனால், இதுவரை அது நடைபெறவில்லை. அண்ணா காலத்தில் இருந்து முத்தமிழறிஞர், ஜெயலலிதா, எடப்பாடி பனிசாமியாக இருக்கட்டும், பிரதமரைச் சந்தித்த பின் செய்தியாளர்களைச் சந்திப்பதுதான் வழக்கம். ஆனால் முதலமைச்சர் விஜயோ செய்தியாளர்களை சந்திக்காமல் டெல்லியில் இருந்து தமிழ்நாடு திரும்பினார்.
த.வெ.க. தலைவர் விஜையைத் தமிழ்நாட்டு மக்கள் முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவர் திருச்சியில் தமிழ்நாட்டு முதல்வராகப் பேசினாரா அல்லது த.வெ.க. தலைவராகப் பேசினாரா என்ற குழப்பம் நிலவுகிறது. பொறுப்பு அவர் கையில் இருக்கிறது; மக்கள் அவருக்கு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும், அவர் பிரச்சாரத்தின்போது பேசிய அதே போன்றதொரு பேச்சையே தற்போதும் பேசியிருக்கிறார்.
'திருமண மேடையில் புலம்பிக் கொண்டிருக்கிறார்' என்று அவர் கூறியிருக்கிறார். திருமண மேடை என்பது சுயமரியாதை மேடைதான். எங்களுடைய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்துத் திருமண மேடைகளும் எங்களுடைய பிரச்சார மேடைகள்தான்!
ஆறு மாத காலம் நேரம் தருவதாகக் கூறிவிட்டு இப்போதே எதிர்க்க ஆரம்பித்துவிட்டீர்கள்' என்று விஜய் கூறியிருக்கிறார். பிரச்சாரத்தின்போது பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துவிட்டு, தற்போது எதையும் செயல்படுத்தாமல் இருக்கிறார் விஜய்.ஒரு மாத காலத்தில் பல்வேறு பாலியல் வன்கொடுமைகள், கொலை மற்றும் கொள்ளைகள் நடைபெற்று வருகின்றன. சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது; சோபா மாடல் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களும் இன்றைய சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்து வருகிறார்கள். அங்கு வெளிப்படையான குதிரை பேரமே நடந்து கொண்டிருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மற்ற மாநில முதலமைச்சர்கள் பின்பற்றி வருகிறார்கள். தமிழ்நாட்டின் பாதுகாப்புச் சக்தியாக விளங்கும் தி.மு.க, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்க விழுக்காட்டிற்கு உயர்த்தி, எல்லாச் சூழ்நிலைகளிலும் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றிக் காட்டியுள்ளது. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக எப்போதும் குரல் கொடுப்பது திராவிட மாடல்தான்.
ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாமா, வேண்டாமா என்று பா.ஜ.க. பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் அனுமதி வாங்கிக் கொண்டு வருகிறீர்கள்! மக்கள் சார்ந்த உரிமை, மாநில உரிமை, தமிழ் ஆகியவற்றிற்காகக் குரல் கொடுப்பது திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே.
ஒரு முதலமைச்சராக மாவட்டங்களுக்குச் செல்லும்போது மக்கள் நலத் திட்டங்களை அறிவிக்க வேண்டுமே தவிர, அதை விடுத்து ரசிகர் மனப்பான்மையுடன், ரசிகர் தன்மையோடு விஜய் பேசியிருப்பது மக்களுக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளது.
இன்றும் கூட விஜய் தான் ஆட்சியில் இருப்பதை மறந்துவிட்டு, இன்னும் தி.மு.க.தான் ஆட்சியில் இருப்பது போன்று பேசி வருகிறார். மேகதாது விவகாரத்தில் எந்தவொரு தெளிவான நிலைப்பாட்டையும் தெரிவிக்காமல், மக்கள் நலத்திட்டங்களையும் செயல்படுத்தாமல் ஏமாற்றி வருகிறார் விஜய்” என்றார்.
Also Read
-
இளம்பெண் மீது கார் ஏற்றிப் படுகொலை : சென்னையை உலுக்கிய கொடூரம்!
-
”தொடர்ந்து 2வது ஐபிஎல் கோப்பை… சாதனை படைத்த RCB.. தோனி, ரோகித் பட்டியலில் ரஜத் படிதார்” - முழு விவரம்!
-
“ரிசர்வ் வங்கி விதிமுறைகளை காரணம் காட்டி விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் த.வெ.க அரசு”: தங்கம் தென்னரசு!
-
”விஜயின் ஆட்சி '20 நாள் இருண்ட காலம்'.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு” : முரசொலி கடும் விமர்சனம்!
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம்... மவுனம் காக்கும் தவெக அரசு; விளாசிய உதயநிதி ஸ்டாலின்!