Tamilnadu

சிங்கப்பெண் அதிரடிப்படையில் தேர்வான பெண் காவலருக்கு டார்ச்சர்? - இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையம் ஒன்றில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் மீது, அதே நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவர் பாலியல் தொந்தரவு மற்றும் பணியிட துன்புறுத்தல் ஆளன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் காவலர் ஒருவருக்கு காவல்நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் வாட்ஸ்அப் மூலம் பெண் காவலருக்கு தொடர்ந்து ஆபாச மற்றும் அநாகரிகமான தகவல்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலளிக்காமல் விலகி இருந்த பெண் காவலருக்கு, பின்னர் பணியிடத்தில் பல்வேறு வகையான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, கணினி தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வந்த அவருக்கு திடீரென மாற்றுப் பணிகள் வழங்கப்பட்டதுடன், தமிழ்நாடு அரசின் “சிங்கப்பெண் அதிரடிப்படை” பணிக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்த போதிலும், அந்தப் பொறுப்பில் அனுப்பாமல் வேறு பணிகள் ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இன்ஸ்பெக்டர் அனுப்பியதாகக் கூறப்படும் தகவல்களின் ஸ்கிரீன்ஷாட்களை சேகரித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளிடம் பெண் காவலர் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இன்ஸ்பெக்டரிடம் விளக்கம் கேட்க சென்ற பெண் காவலரின் கணவரிடம் தரக்குறைவாக பேசியதுடன், மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட காவலருக்கே இத்தகைய நிலை ஏற்பட்டிருப்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கோவையில் மீண்டும் கொடூரம்: 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - த.வெ.க ஆட்சியில் தொடரும் அவலம்!