Tamilnadu
ஓசூர் விமான ஆய்வு மையம் ஆந்திராவுக்கு மாற்றம் : இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது - டி.ஆர்.பி.ராஜா!
ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில், 16 ஆயிரம் கோடி மதிப்பிலான 5-ம் தலைமுறை இலகுரக போர் விமானம் தயாரிக்கும் ஆலைக்குப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் நேற்று அடிக்கல் நாட்டினர்.
இது குறித்து தமிழ்நாட்டின் முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சமூகவலைத்தளப் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாம் பயப்பட்டது நடந்துகொண்டிருக்கிறது! இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். தொழில்நுட்ப ரீதியாகச் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கியிருந்தும், ஒருங்கிணைந்த விமானப் பரிசோதனை மையத்தை தமிழ்நாடு இழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, இத்திட்டத்தை ஓசூரில் கொண்டுவருவதற்காக மூன்று ஆண்டுகளாக DRDO-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும், இதற்காக 100 ஏக்கர் நிலத்தை இலவசமாக அளிக்கவும், 3.5 கிலோமீட்டர் நீள ஓடுபாதையை அமைக்கவும் திமுக அரசு முன்வந்ததாகவும் தெரிவித்துள்ள அவர், இத்திட்டம் பெங்களூருவில் உள்ள விமான மேம்பாட்டு முகமைக்கு அருகில் அமையும் வாய்ப்பு இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, இத்திட்டம் அரசியல் காரணங்களுக்காக வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முக்கியத்துவம் வாய்ந்த தேசியப் பாதுகாப்புத் திட்டங்களை அரசியல் காரணங்களின் அடிப்படையில் தீர்மானிக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
இத்திட்டம் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி என்றும், கூட்டாட்சியின் மீதான நம்பகத்தன்மைக்குப் பெரும் சேதம் விளைவிக்கக்கூடியது என்றும் அவர் விமர்சித்துள்ளார். இத்திட்டத்திற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக தனது குழு கடுமையாக உழைத்ததாகவும், மிக முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது மிகுந்த மனவேதனையை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் டி.ஆர்.பி.ராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
Also Read
-
சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: “இதிலும் வாய்மூடி இருக்காமல்..” -விஜய் அரசுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
-
அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறை.. எல்லை மீறும் கர்நாடகாவுக்கு குவியும் கண்டனம்!
-
திமுக வழக்கறிஞர் அணி கூட்டம் : நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் என்ன? - விவரம் உள்ளே!
-
மாத கணக்கில் அறுந்து கிடந்த மின் ஒயர்.. மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்.. காஞ்சியில் சோகம்!
-
“கழகத்தின் முதுகெலும்பு சட்டத்துறை.. பாசிச தவெக.. அமைச்சர்களைக் கூட தெரியாத முதல்வர்” : உதயநிதி பேச்சு!